கூவத்தூர்: எம்.எல்.ஏ.வுக்கு அடி, உதை?

சசிகலாவின் கண்காணிப்பில், கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களில் ஒருவரான செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன் அடித்து உதைக்கப்பட்டதாக தகவல் பரவியது. இந்த நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதற்காகன சிகிச்சைக்காக மருத்துவர்கள் வந்தனர் என்றும் சசிகா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் அக் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் உச்சகட்ட அதிகாரப்போர் நடந்துவருகிறது.

கணிசமான எம்.எல்.ஏக்களை சசிகலா தனது கண்காணிப்பில் சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கவைத்துள்ளார். அவர்களை வலுக்கட்டாயமாக அடைத்துவைத்திருக்கிறார்கள் என்று புகார் எழுந்தது.

ஓட்டலில் அந்த எம்.எல்.ஏக்களுக்கு வேண்டியது எல்லாம் கிடைத்தாலும், வெளியே அனுப்பப்படுவதில்லை. ஓட்டலில் இருந்து இரு கி.மீ. தூரம் சில எம்.எல்.ஏக்கள் அழைத்துவரப்பட்டு செய்தியாளர்களிடம் பேச வைக்கப்பட்டனர்.

அப்போது அவர்கள், தாங்கள் ஓட்டலில் அடைத்துவைக்கப்படவில்லை என்றும் சுய விருப்பத்தின் பேரிலேயே தங்கியிருப்பதாகவும் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர், செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன்.

அவர் தற்போது ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக தெரிவித்ததாகவும் அதனால் தாக்கப்பட்டார் என்றும் ஓட்டலுக்கு மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர் என்றும் தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், “இங்கு தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்களில் சிலருக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டன. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வந்தனர். இதை வைத்து தவறான தவகவல் பரவிவிட்டது. தற்போது எம்.எல்.ஏக்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள்” என்று சசிகலா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.