கீரமங்கலம்,:

கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி அரசு பள்ளிக்கு மாணவர்கள் சென்று வர கிராம மக்கள், இளைஞர்கள் வேன் ஒன்றை இலவசமாக வழங்கி அசத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி கிராமத்தில் 1973-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் படித்த  மாணவர்கள் பலர் உயர்ந்த பதவியில் உள்ளனர். சிலர்  மருத்துவர் களாகவும் மற்றும் பலர் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பல துறை அதிகாரிகளாக உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது. மேலும் பள்ளியில் ஆசிரியர்கள் 4 பேருடன் கூடுதலாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் சிறப்பு ஆசிரியர்களும் பணி புரிந்து வருகின்றனர். கணினிகள் போன்ற வசதிகளும் உள்ளது.

இந்நிலையில் அரசு பள்ளிக்கு மாணவர்கள் வருகை அதிகரிக்கவும், அவர்கள் எளிதாக வந்து செல்ல வசதியாகவும், திட்டமிட்ட முன்னாள் மாணவர்கள் வெளிநாடு வாழ் இளைஞர்கள் ஆகியோர் இணைந்து பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக வேன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நடைபெற்ற விழாவில். பொதுமக்கள் வேன் சாவியை  மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி குணசேகரனிடம்  வழங்கினார்கள். அவர் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திராவிடம்  வழங்கினார்.

வேன் சாவியை பெற்றுக்கொண்ட பள்ளி தலைமை ஆசிரியை சந்திரா பேசும்போது, “மாணவர்கள் மீது பெற்றோர்கள் மற்றும்  இளைஞர்கள்அ அதிக அக்கறை கொண்டுள்ளதால் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். இதன் காரணமாக எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மேலும் மேலும் சாதனை படைத்து வருகிறார்கள் என்றார்.

உதவி தொடக்க கல்வி அலுவலர் குணசேகரன் பேசும்போது, அரசு பள்ளியை தரம் உயர்த்த  அரசு உதவியை மட்டும் எதிர்பார்த்து காத்திருக்காமல் கிராம மக்களே தனியார் பள்ளிக்கு இணையாக தரம் உயர்த்தி வருவது பாராட்டத்தக்கது” என கூறினார்.