பாரிமுனை:
சென்னை பாரிமுனைப் பகுதியான கொத்தவால் சாவடி பகுதியில் உள்ள மளிகை மொத்த வியாபாரக் கடைகள் அனைத்தும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்றுமுதல் 24ந்தேதி வரை 6 நாட்கள் முடப்படுகிறது.

சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. சென்னை பாரிமுனையை அடுத்த ராயபுரம், தண்டடையார்பேட்டை மண்டலங்களிலும் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது.
இதற்கிடையில், தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக ஏராளமானோர் ஜன நெருக்கடி மிகுந்த கொத்தவால் சாவடிப் பகுதியில் குவிந்து வருகின்றனர். இதனால், கொத்தவால்சாவடி மற்றொரு கோயம்பேடு கிளஸ்டராக மாறும் வாய்ப்பு உருவானது.
இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் கடைகளை சில நாட்கள் மூடுவது தொடர்பாக, கொத்தவால்சாவடிப் பகுதி மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இந்த கூட்டத்தில், மக்கள் கூட்டம், சில்லரை வியாபாரிகள்  கூட்டம் அதிகரிப்பு காரணமாக, கொந்தவால்சாவடிப் பகுதியும் கோயம்பேடு மார்க்கெட் போல் கொரோனா பரவலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான வியாபாரிகள் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து,
கொத்தவால்சாவடிப் பகுதியில் உள்ள மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை  கடைகள் அனைத்தும், இன்று முதல்   (19ம் தேதி) முதல் வரும் 24ம் தேதி வரை 6 நாட்கள்  மூடப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, இன்றுமுதல் அங்கு அனைத்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.