கொத்தவால்சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம்…

சென்னை:

க்கள் நெருக்கத்தால் சிக்கித்தவித்து வந்த கொத்தவால் சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனாபரவலை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. சென்னையிலும் சில பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் ஓரளவுக்கு கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை பாரிமுனை பகுதியில் ஏராளமான மொத்த விலைக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளதால், அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த பகுதியில் சமூக விலகல் கடைபிடிக்க போதுமான இடம் இல்லாததால், கொரோனா தொற்று பரவலுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மாநகராட்சி கருதியது.

இதையடுத்து, கொத்தவால்சாவடி சந்தையை, அங்கிருந்து அகற்றி, பூக்கடை அருகே உள்ள  பாரிமுனை பேருந்து நிலையத்தில் வைத்துக்கொள்ள மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.

மேலும், சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், அங்கு வரும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி சென்னை கண்டிப்புடன் எச்சரித்துள்ளது.

மேலும், பொது மக்களின் வாகனங்கள் பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டு உள்ள துடன்,  சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்து வருகின்றனர்.