கோவை கல்லூரி மாணவி விபத்தில் பலி; பயிற்சியை தான்  நடத்தவில்லை என நழுவியது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்

கோவை தனியார் கல்லூரியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியை தாங்கள் அந்த பயிற்சியை நடத்தவில்லை என்றும், தங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவிரித்துள்ளது.

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகேயுள்ள நாதேகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் நல்லாகவுண்டர். இவரது மகள் லோகேஸ்வரி (வயது 19). இவர் வாளையார் சாலையில் நரசிபுரம் பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பிபிஏ படித்து வந்தார்.

இந்த நிலையில்  கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மைப் பயிற்சி முகாம் நடந்தது.  கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது பூகம்பம் உள்ளிட்ட நிகழ்வுகளின்போது, கட்டடத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பிப்பது எப்படி என்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இரண்டாவது மாடியில் இருந்து மாணவிகள் கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றவும் மாதிரி பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது மாடியில் இருந்து மாணவிகள் ஒவ்வொருவராக   கீழே விரிக்கப்பட்ட வலையில்    குதித்தனர்.

மாணவி லோகேஸ்வரி கீழே குதிக்கும் போது அவரது தலை சன்ஷேடில் மோதியது. இதனால் தலை மற்றும் கழுத்தில் கடுமையான காயம் ஏற்பட்டது. மயக்கமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

போதிய பயிற்சி இல்லாதவரைக் கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டதாக பலரும் குற்றம்சாட்டினர். .

இந்த நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தங்களுக்கும் இந்த பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லை, தாங்கள் இப்படி ஒரு பயிற்சியே அளிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

 

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“துரதிருஷ்டவசமாக நிகழ்ந்த இந்த சம்பவத்தில் நாம் ஒரு இளம்பெண்ணின் உயிரை இழந்துவிட்டோம்.  அவரது குடும்பத்தாருக்கு இதயபூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த பயிற்சியை தேசிய பேரிடர் மேலாண்மை மேற்கொள்ளவில்லை, பயிற்சியில் ஈடுபட்டு விபத்து ஏற்பட காரணமான அந்த பயிற்சியாளர் எங்களுடைய அதிகாரபூர்வ பயிற்சியாளர் அல்ல” என்று தெரிவித்துள்ளது.