சென்னை:
கோவை சுந்தராபுரத்தில் பெரியார் சிலை மீது காவி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் கண்டனம்  தெரிவித்து உள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டில்,
என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார்! சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்!
திமுக எம்.பி. கனிமொழி
தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் ? மான உணர்வும், சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு, தந்தை பெரியாரை அவமதிப்பதை  பற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தமிழக அரசு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கேவலமான இந்தச் செயலில் ஈடுபட்ட வர்களை கண்டுபிடித்துக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன்நிறுத்தி, கடுமையான தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும் என்றும் ம.தி.மு.க சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.