சென்னை;
கொரோனா பரவல் ஹாட்ஸ்பாட்டாக கோயம்பேடு மார்க்கெட் திகழ்ந்து கண்டறியப்பட்ட நிலையில், மார்க்கெட் முழுவதும் மூடப்பட்டு உள்ளது. தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி திருமழிசை பகுதியில் நடைபெற்று வருகிறது.
கடந்த நாட்களாக மார்க்கெட் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு  சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனால்  கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று வெளியூர்களில் இருந்து காய்கறிகள் வராததால் சென்னையில் பல இடங்களில்காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இதனால், இருக்கும் காய்கறிகளை கடுமையான விலை உயர்வில் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்பேடு சந்தையில் வணிகம் செய்த வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு பரவிய கொரோனா தொற்று காரணமாக தற்போது சென்னை உள்பட அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோயம்பேடு சந்தையை மூடிய அரசு, அதற்கு பதிலாக  தற்காலிக சந்தையை  திருமழிசையில் அமைத்து வருகிறது. ஆனால், இங்கு செல்ல மாட்டோம் என சில வியாபாரிகள் அரசை மிரட்டிய நிலையில், அரசு திருமழிசையில்  வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவில் மார்க்கெட் அமைக்கும் பணியை தொடங்கி உள்ளது.
10 அடி இடைவெளியில் கடைகள் அமைக்கப்படும் ஒரு கடைக்கு 200 சதுரடி ஒதுக்கப்படுகிறது. ஒரு வரிசையில் 35 கடைகள் என 100 கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று அல்லது நாளை அந்த பணிகள் முடிவடைந்து, விரைவில் மார்க்கெட் திறக்கப்பட உள்ளது.
பொக்லைன் எந்திரங்களை கொண்டு சீரமைப்பு பணிகள் நடக்கிறது. மேலும் கண்காணிப்பு கோபுரங்களும், தண்ணீர் வசதி, கழிவறை வசதிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக சென்னைக்கு வெளி மாநிலங்களில் இருந்து காய்கறி வரத்து இல்லாததால்,  தங்களிடம் ஸ்டாக் இருக்கும் காய்கறிகளை வியாபாரிகள் பல மடங்கு விலை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்.
அத்தியாவசியத் தேவையான வெங்காயம், தக்காளி ஓரளவுக்கு சாதாரண விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால்,  அவரைக்காய், பீன்ஸ் போன்ற இங்கிலிஷ் காய்கறிக்ள  கிலோ ரூ. 120ஐ தாண்டி ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேவேளையில் புறநகர்களில் இருந்து கீரைக்கட்டுக்கள் ஏராளமாக சென்னையில்குவிந்துள்ளன. அவை எப்போதும்போல ரூ.20 விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.