லுங்கி அணிந்தவர் ஓட்டலுக்குள் வரத் தடை : கோழிக்கோடு இளைஞர்கள் போராட்டம்

கோழிக்கோடு

லுங்கி அணிந்ததால் உள்ளே விட மறுத்த ஓட்டல் நிர்வாகத்தை எதிர்த்து நேற்று இளைஞர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

கேரள மாநிலத்தில் இளைஞர்கள் லுங்கி அணிவது மிகவும் சகஜமான ஒன்றாகும். கடந்த சனிக்கிழமை அன்று கோழிக்கோடு நகரில் உள்ள சீ குவின் என்னும் ஓட்டலுக்கு லுங்கி அணிந்து வந்த கரீம் செலம்பரா என்னும் இளைஞரை அனுமதிக்க மறுத்துள்ளனர். அவருடன் அவர் நண்பரும் லுங்கியுடன் சென்றுள்ளார். இருவரும் மேல் மாடியில் உள்ள உணவு மற்றும் மது அருந்தும் விடுதிக்குச் செல்ல முற்பட்டுள்ளனர்.

அப்போது அவரை ஓட்டல் ஊழியர் தடுத்துள்ளார். லுங்கி அணிந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என காரணம் தெரிவித்துள்ளார். இதை  ஒட்டி கரீம் லுங்கியை அவிழ்த்து விட்டு உள்ளாடையுடன் நுழைய முற்பட்டுள்ளார். அவரை தடுத்து ஊழியர்கள் வெளியேற்றி உள்ளனர்.

இதை ஒட்டி கரீம் லுங்கி அணிந்தவர்களை அனுமதிக்க முடியாது என எழுதி அளிக்கச் சொல்லி உள்ளார். அவர்கள் எழுதி கொடுத்த பிறகு அவர் அதை எடுத்துச் சென்று காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆர்வலர்களான ஷாஜில் தாமரசேரி,  ரவீந்திரன் மற்றும் அப்துல் மஜீத் ஆகியோருடன் இணைந்து போராட்டம் நடத்தி உள்ளார்.

இது குறித்து சீ குவின் ஓட்டல் நிர்வாகம், “மேல் மாடியில் உள்ள உணவகத்துக்கு நாங்கள் லுங்கி அணிந்தோரை அனுமதிப்பதில்லை. அந்த இடம் குடும்பத்துடன் வருபவர்களுக்கானது. பல பெண்கள் வரும் இடத்துக்கு லுங்கியுடன் வரக்கூடாது என்பது ஓட்டலின் கொள்கை முடிவாகும். இதே ஓட்டலில் இரண்டு பார்கள் உள்ளன. அங்கு உடை கட்டுப்பாடு கிடையாது.

இந்த ஓட்டலில் கண்காணிப்பு காமிரா பதிவுகளைப் பார்ப்பவர்களுக்கு நாங்கள் அனுமதிக்காதது சரி என்பது புரியும். அந்த மனிதர் திடீரென லுங்கியை அவிழ்த்து விட்டு உள்ளாடையுடன் அனைவர் முன்னிலையிலும் நிற்கத் தொடங்கி விட்டார்.  அதனால் அவரை நாங்கள் ஓட்டலில் இருந்து வெளியேற்றினோம். பெண்கள் இருக்கும் இடத்தில் இவர் இவ்வாறு உள்ளாடையுடன் நிற்பது தவறு என்பதையும் புரியாத நிலையில் அவர் இருந்தார்.

அத்துடன் தாம் இஸ்லாமிய பாணியில் லுங்கி உடுத்தி இருந்ததால் தம்மை அனுமதிக்கவில்லை என திடீரென சத்தம் போட தொடங்கினார். அதன் பிறகு அவரை தடுத்தவரின் பெயர் பலகையைக் கண்டு அவரும் இஸ்லாமியர் என தெரிந்ததால் அந்த புகாரைக் கைவிட்டார். ஆனால் இந்த பொய்யை சமூக ஊடகங்களில் ஒரு சிலர் பரப்பி வருகின்றனர்” என தெரிவித்துள்ளது.