டேராடூன்:

உத்தர்காண்ட் மாநிலம் பேன்ட்நகரில் உள்ள ஜி.பி.பேன்ட் வேளாண்மை தொழில்நுட்ப பல்கலைக்கழக சிறப்பு பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் நேபாள பிரதமர் சர்மா ஒலி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘இந்தியாவின் நவீன வேளாண் தொழில்நுட்பத்தில் இப்பல்கலைக்கழகம் சிறப்பாண பங்களிப்பை அளித்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் நேபாளத்துடன் இணைந்து செயல்பட்டால் தொழில்நுட்ப ரீதியிலான வேளாண் புரட்சியை எங்களது நாட்டில் ஏற்படுத்தலாம்.

நேபாளத்தின் 3ல் 2 பங்கு மக்கள் தொகையினர் விவசாயத்தை சார்ந்துள்ளனர். எனினும் இந்த துறை சார்பில் நாட்டிற்கான பொருளாதார பங்களிப்பு என்பது குறிப்பிடும் வகையில் இல்லை. நேபாளில் 2 வேளாண் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றை இந்திய அரசும், பேன்ட்நகர் பல்கலைக்கழகமும் தான் வலுப்படுத்த வேண்டும்’’ என்றார்.

இந்த விழாவில் நேபாள பிரதமருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. உத்தர்காண்ட் கவர்னர் கே.கே.பவுல், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.