பெங்களூரு

குப்பைகள் மேலாண்மை குறித்து கர்நாடக அரசு புதிய சட்டங்களை அறிவிக்க உள்ளது.

பெங்களூரு நகரில் நாள் ஒன்றுக்கு சுமார் 4200 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகின்றன. அவற்றை அகற்றி அழிப்பது அரசுக்கு பெரும்பாடாக உள்ளது. அத்துடன் இதில் முக்கிய பணியாக மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரிக்கும் பணி உள்ளது. இந்த குப்பைகளை பிரித்து போட வேண்டும் என பல முறை பெங்களூரு மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆயினும் மக்கள் அதை கடைபிடிப்பதிலை.

இதனால் கர்நாடக மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் ஒரு யோசனையை அளித்துள்ளது. அதன்படி மக்கும் குப்பைகளை மாநகராட்சி எடுத்து வராமல் அவற்றை அந்தந்த வீடுகளிலேயே மறுசுழற்சி செய்ய வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளது. இது குறித்து கர்நாடகா நகர மேம்பாட்டு துறை கர்நாடக நகராட்சி விதிகளில் உடனடியாக மாறுதல் செய்து அதற்கேற்ப திட்டங்களை அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

கர்நாடக மாநில மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி ஒருவர், “ஒவ்வொரு வீடுகளிலும் மக்கும் குப்பைகள் மறுசுழற்சியை செய்ய வேண்டியது கட்டாயம் என அறிவித்து அதற்கேற்ப திட்டங்கள் அமைக்க வேண்டும். இது போல எந்த மாநிலத்திலும் இது வரை கட்டாயமாக்கப்பட்டதில்லை. இதை நாம் செய்தால் நமது நிலங்களில் சேரும் குப்பைகள் குறையும்.

இந்த கொள்கையில் நாம் இந்தியாவில் முதல் மாநிலமாக இருப்போம். இதற்கு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். பெங்களூருவில் உருவாகும் குப்பைகளில் 70% மக்கும் குப்பைகள் ஆகும். மக்களில் 60% க்கும் மேற்பட்டோர் இவைகளை பிரிப்பதில்லை. இதனால் அதிகம் குப்பைகள் சேருகின்றன்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் வாரியம் இந்த மக்கும் குப்பைகளை ஒவ்வொரு வீட்டிலும் அல்லது மொத்தமாக ஒரு இடத்தில் சேர்த்து அவற்றை மறு சுழற்சி மூலம் உரமாக்கி அந்த உரத்தை அரசு விலைக்கு வாங்க வேண்டும் என யோசனை அளித்துள்ளது. அத்துடன் இவ்வாறு மக்கும் குப்பைகள் எடுக்காமல் மாநகராட்சி விட்டு விட்டால் மக்கள் இதை செய்தாக வேண்டும் என்னும் நிலை ஏற்படும் எனவும் கூறி உள்ளது.

இது குறித்து கர்நாடக மாநில உள்ளாட்சி துறை அதிகாரி, “இந்த யோசனை நல்ல யோசனையாக தெரிகிறது. இதை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். தற்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலில் உள்ளதால் புதிய சட்டங்கள் இயற்ற முடியாது. அதன் பிறகு இது குறித்து முடிவு அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.