சென்னை:

ந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில்,  பூண்டி ஏரியில் இருந்த புழல் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை தீரும் என்று நம்பப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால், சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி,  செம்பரம்பாக்கம், புழல் ஏறி உள்பட பல ஏரிகள் வறண்டன. இதையடுத்து, ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில்மூலம தண்ணீர் கொண்டு வரப்பட்டு சென்னை மக்களின் தண்ணீர் தாகம் தீர்க்கப்பட்டது.

இதற்கிடையில், சமீப காலமாக அவ்வப்போது பெய்து வரும் காரணமாக ஏரிகளில் தண்ணீர் சேமிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அமைச்சர்களின் வேண்டுகோளை ஏற்று, தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர அரசு, சென்னை குடிநீர் தேவைக் காக கண்டலேறு அணையில் இருந்து செப். 25 முதல் கிருஷ்ணா நீரை திறந்து விட்டு வருகிறது. தொடக்கத்தில் விநாடிக்கு 500 கன அடி திறக்கப்பட்டு, பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த தண்ணீர் தற்போது பூண்டி ஏரிக்கு வந்துகொண்டிருக்கிறது. வினாடிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்பட்டு பூண்டிக்கு வந்துகொண்டிருப்பதாகஅதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக பூண்டி ஏரியின் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

சுமார், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவுக் கொண்ட பூண்டி ஏரியில், நேற்றைய  நிலவரப்படி 1,011 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஆகவே, சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து,  புழல் ஏரிக்கு விநாடிக்கு 250 கன அடி நீர் நேற்று முதல் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த தண்ணீர் இன்று புழல் ஏரியை முழுமையாக வந்தடையும் என்றும், இதன் காரணமாக சென்னை மக்களின் தண்ணீர் தேவை சமாளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.