சென்னை: கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து டிசம்பர் 14ம் தேதி முதல் நீர் திறக்க  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில், 14.12.2020 முதல் 12.4.2021 வரை மொத்தம் 120 நாட்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்படுகிறது.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள 9012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.