கேரளாவில் மாரடைப்பால் மரணமடைந்த கிருஷ்ணசாமி உடல் கொண்டுவர மநீம உதவி: கமல்

--

சென்னை:

நீட் தேர்வு எழுதுவதற்காக தனது மகனை கேரளாவுக்கு அழைத்து சென்றபோது அங்கு மாரடைப்பால் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் உடலை திருத்துறைப்பூண்டி கொண்டு வருவதற்கான உதவிகளை மக்கள் நீதி மய்யம் செய்யும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளம் அழைத்துச் சென்றிருந்தார். மகனை தேர்வுக்கு அனுப்பிவிட்டு எர்ணாகுளத்தில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த மகாலிங்கத்துக்கு ஏற்பட்டிருந்த மன அழுத்தம் காரணமாக திடீர்  மாரடைப்பு ஏற்பட்டது.

இதையறிந்த அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் உயிர் பிரிந்தது. கிருஷ்ணசாமியின் உடல், மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தந்தை இறந்தது தெரியாமல் மாணவன் கஸ்தூரி மகாலிங்கம், தேர்வு எழுதினார்.

தேர்வு முடிந்து வெளியே வந்த மகாலிங்கத்துக்கு தந்தை மரணம் அடைந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.  மருத்துவமனையில் தனது தந்தை உயிரற்ற உடலாக இருந்ததைப் பார்த்த கஸ்தூரி மகாலிங்கம், கதறி அழுதார். இதனால் அந்த பகுதி சோகமயமானது.

கிருஷ்ணசாமியின் உடலைப் பெற்றுக் கொள்வதற்காக அவரது உறவினர்கள் இருவர் எர்ணாகுளம் வந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய் நிவாரணம் நிதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கிருஷ்ணமூர்த்தியின் உடல் திருத்துறைப்பூண்டி வந்தடையும் வரை மக்கள் நீதி மய்யம் உதவிகள் செய்யும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், ஒக்கி புயல் முதல் நீட் தேர்வு என்று தமிழர்கள் அல்லல் படும்பொழு தெல்லாம் உதவிக்கரம் நீட்டிய அண்டை மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் பேசி தமிழர்களின் நன்றியைத் தெரிவித்தேன். மாணவரின் தந்தை உடல் திருத்துறைப்பூண்டி வந்தடையும் வரை உதவிகள் செய்யும் மக்கள் நீதி மய்யம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.