சென்னை

மிழர்களுக்கே துரோகம் செய்து விட்டு எந்த முகத்தோடு தமிழகத்துக்கு மோடி வாக்கு சேகரிக்க வருகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கேட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   அதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.   ஆளும் கட்சிகளான அதிமுக மற்றும் பாஜகவுக்கு வாக்கு சேகரிக்க நேற்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்துள்ளார்.  இதற்கு மாநிலம் எங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காகப் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பயணம் செய்கிறார்  .அவர் தமிழகத்துக்குத் தொடர்ந்து துரோகம் இழைக்கிறார்.  ஆகவே தமிழக மண்ணில் காலடி எடுத்து வைக்கும் தார்மீக உரிமை இழந்துவிட்டார்.

அவருக்கு தாராபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் போது கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க விவசாயிகள் தயாராகிவிட்டார்கள்.  மோடியைத் திரும்பப் போகச் சொல்ல ஆறரை ஆண்டுக் கால மோடி ஆட்சியில் பட்ட துன்பங்கள், மாற்றாந்தாய் மனப்போக்கு, தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்பாடு மீது நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதல்கள், தமிழரின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கை எனப் பல காரணங்கள் உள்ளன.

அதே வேளையில் அவரை வரவேற்பதற்கு  நம்மிடம் ஒரே ஒரு காரணம் கூட இல்லை என்பது தான் எதார்த்தம்.  தமிழர்களுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்துவிட்டு, சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கத் துடிக்கும் பிரதமர் மோடி எந்த முகத்தோடு வந்து தமிழக மக்களிடம் வாக்குகளைக் கேட்பார்? பிரதமர் மோடியின் ஒவ்வொரு அசைவும் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் எதிரானதாகவே உள்ளது.

பாஜகவினர் இந்த மண்ணில் மதக்கலவரங்களைக் கட்டவிழ்த்துவிட நினைக்கிறார்கள். அவர்களின் குரல்கள் விண் அதிர ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.   ஆயினும் கடந்த மக்களவை தேர்தலில் தமிழக வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக பாஜக-அதிமுக கூட்டணியை நிராகரித்ததைப் போல வருகிற சட்டமன்ற தேர்தலிலும் வாக்களிக்க வேண்டும்.”  எனத் தெரிவித்துள்ளார்.