சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக பேசிய நெல்லை கண்ணனைக் கைது செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ராஜிவ் காந்தியை கொலை செய்தது நாங்கள் தான் என்ற சீமானை ஏன் கைது செய்யவில்லையென கேள்வி எழுப்பினார்.

இலக்கியம் மற்றும் சொற்பொழிவிற்காக பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவரும் தமிழறிஞருமான நெல்லை கண்ணன்  திருநெல்வேலி மாவட்டத்தில் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ) ஏற்பாடு செய்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

அவர் ஆற்றிய உரையின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி, கைது செய்யப்பட வேண்டுமெனக் கோரி பாஜக போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர் சிக்கலுக்குள்ளானார். அதன்படி 1ம் தேதி பிற்பகல் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி காவல் பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் இதற்காக அவர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினர். பாஜக போராட்டத்தை நடத்தியதோடு, 2ம் தேதி மாலைக்குள் கண்ணனைக் கைது செய்ய அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்ததையடுத்து காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இது குறித்து கருத்து வெளியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மோடி, ஷாவை குறிப்பிட்டு பேசியதற்காக கைது நடவடிக்கை எடுத்துள்ள நீங்கள் ராஜிவ் காந்தியை கொன்று புதைத்தது நாங்கள் தான் என்று பேசிய சீமானுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத்து ஏன் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.