கும்மிடிப்பூண்டி

ன்றைய நிகழ்வில் பிரதமர் மோடி ஔவையார் பாடலை மேற்கோள் காட்டியது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

இன்று சென்னையில் பெருநகர் ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.   அவர் அந்த நிகழ்வில் ஔவையார் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டினார்.  வரப்புயர நீர் உயரும் எனத் தொடங்கும் அந்தப் பாடல் விவசாயிகளின் பெருமையை உரைப்பதாகும்.

தற்போது வேளான் சட்டங்களைத்  திரும்பப் பெறக் கோரி சுமார் இரண்டரை மாதங்களாக டில்லியில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.   மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கப் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்து வருகிறது.  இதையொட்டி தமிழகம்  எங்கும் ஏர் கலப்பை ஆர்ப்பாட்டத்தைத் தமிழக காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது.

இதையொட்டி இன்று கும்மிடிப்பூண்டியில் நடந்த ஆர்ப்ப்பட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி பங்கேற்றுள்ளார்.  அவர் அப்போது, “பிரதமர் மோடி தமிழக மக்களைக் கண்டு அஞ்சுவதால் சாலையில் செல்லாமல் வான் வழியாகச் சென்றுள்ளார்.  மேலும் விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்காமல் பிரதமர் மோடி ஔவையார் பாடலை மேற்கோள் காட்டுவது அவர் நடவடிக்கைக்கு எதிரும் புதிருமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்