சென்னை:

ர்நாடக அரசு தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே க அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், உடேனே மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழகஅரசை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.

தென்பெண்ணை ஆறு கர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலையில் உற்பத்தியாகி அங்கிருந்து ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வழியாக 432 கி.மீ தூரம் பயணித்து கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அரசு 50 மீட்டர் உயரத்தில் புதிய அணை ஒன்றை கட்டி வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் புதிய அணை கட்டுமானத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ். அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

காவிரி நடுவர்மன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு கர்நாடகத்திற்கு ஆதரவாக விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்வதற்கு அனுமதி அளித்து தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து வருகிறது.

இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.

தென்பெண்ணை ஆறு பெங்க;ரில் உற்பத்தியானலும், 432 கி.மீ. நீளமுள்ள இந்த ஆறு கர்நாடகாவில் 110 கி.மீ. தூரமும், தமிழகத்தில் 320 கி.மீ. தூரமும் பாய்கிறது. இந்த ஆற்றின் நீரைக் கொண்டு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனமும், 5 மாவட்டங்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆறு கர்நாடகாவை விட தமிழகத்தில் அதிக நீளம் பாய்வதால் தமிழகத்திற்கு இருக்கிற உரிமையை எவரும் மறுக்க முடியாது.

இந்நிலையில், கர்நாடக அரசு 1892 ஆம் ஆண்டு மேற்கொண்ட நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, தென்பெண்ணை ஆற்றில் குடிநீர்த் தேவைக்கு என்று கூறி கர்நாடகா அணை கட்டுவதை உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது தமிழகத்தை கடுமையான பாதிப்புக்கு ஆளாக்க நேரிடும். இந்த அணையை கட்டுவதற்கு தமிழகத்தின் அனுமதியைப் பெறாமல், மத்திய பா.ஜ.க. அரசின் நீர்வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை எந்த அடிப்படையில் அனுமதி வழங்கியது எனத் தெரியவில்லை. இந்த அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? தும்பை விட்டு வாலை பிடிக்கிற நிலையில் தென்பெண்ணை ஆற்றில் அணை கட்டுவதற்கான அனுமதியை மத்திய பா.ஜ.க. அரசு வழங்கிய போதே தடுத்து நிறுத்தத் தவறியதன் விளைவாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தமிழகம் ஆளாகியுள்ளது. இதற்கு அ.தி.மு.க. அரசின் அலட்சியமும், பொறுப்பற்ற போக்கும் தான் காரணமாகும்.

எனவே, தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கிற வகையில் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனுவை தாக்கல் செய்து, நியாயமான தீர்ப்பை பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.