வெள்ள நிவாரண சந்திப்பின் பொழுது உணவு பொட்டலத்தை அலட்சியமாக வீசி எறிந்த அமைச்சர்!

வெள்ள நிவாரண சந்திப்பின் பொழுது உணவு பொட்டலத்தை அலட்சியமாக வீசி எறிந்தாக கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சரும், முதல்வர் குமாரசாமியின் சகோதரருமான ரேவண்ணா மீது புகார் எழுந்துள்ளது.

கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.  பல்வேறு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் ஜோடுபாலா பகுதியில் 6 பேர் மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், கடலோர காவல்படையினர், மாநில மீட்பு குழுவினர், நீச்சல் வீரர்கள், தீயணைப்பு படையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர், மின்வாரிய அதிகாரிகள் என 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இராமநாதபுரா என்ற இடத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதற்காகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா சென்றார். இவர் முதல்வர்  குமாரசாமியின் சகோதரர் ஆவார்.

அப்போது அங்கு கூடியிருந்த மக்களுக்கு உணவுப்பொட்டலங்களை அவர் கையால் அளிக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அப்போது ரேவண்ணா, உணவுப்பொட்டலங்களை மக்கள் கையில் கொடுக்காமல் வீசி எறிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உணவுப்பொட்டலங்களை மக்களை நோக்கி அவர் வீசி எறியும் வீடியோ காட்சியும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.  அவருக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அதிகமானோர் கூடியதால் உணவுப்பொட்டலங்களை வீசி எறிய வேண்டிய நிலை ஏற்பட்டது என்று ரேவண்ணா விளக்கம் அளித்துள்ளார்.