மூன்று கிலோ மீட்டர் ஓடி ஆயிரக்கணக்கான ரயில் பயணிகளை காப்பாற்றிய மனிதர்!

--

ண்டவாளத்தில் விரிசல் இருப்பதை அறிந்த உடல்நலமில்லாத ஒருவர், பெரும் விபத்தை தவிர்க்க 3 கி.மீ ஓடி தகவல் தெரிவித்து விபத்தைத் தடுத்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம், கொரங்கிரபாடியை சேர்ந்தவர் கிருஷ்ணா பூஜாரி. வயது 53.  கடந்த சில மாதங்களாக இவருக்கு உடல் நலமில்லை. இதையடுத்து மருத்துவர்கள்,  தினமும் நடைபயிற்சி செய்ய அறிவுறுத்தினர். இதையடுத்து அருகில் உள்ள ரயில் பாதை ஓரமாக தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

கடந்த சனிக்கிழமையும் வழக்கம்போல சென்றவர், தண்டவாளத்தில் விரிசல் இருப்பதைக் கண்டு அதிர்ந்தார். இன்னும் சற்று நேரத்தில் அந்த வழியில் ரயில் வர இருக்கிறதே என்று பதறினார்.

உடனே தனது உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் ரயில் பாதை அருகிலேயே  உடுப்பி ரயில்நிலையம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஓடினார். அங்கிருந்த அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.

விரைந்து செயல்பட்ட ரயில்வே அதிகாரிகள், அடுத்து வர இருந்த ரயில்களை முந்தைய நிலையங்களிலேயே நிறுத்தச் செய்தனர். மேலும் ரயில்வே ஊழியர்கள், விரிசலை சரி செய்தனர். அதன் பிறகு ரயில்கள் இயக்கப்பட்டன.

இதுபற்றி ரயில்வே அதிகாரிகள், “உரிய நேரத்தில் பூஜாரி ஓடி வந்து தகவல் தெரிவித்தார். அதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்” என்று பூஜாரியை பாராட்டினர்.