கு.க.செல்வம் வழக்கு: ஸ்டாலினுக்கு நீதி மன்றம் நோட்டீஸ்…

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் மீது, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் தொடர்ந்த வழக்கில், ஸ்டாலினுக்கு நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம்  திமுக தலைமைமீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். முன்னதாக அவர், டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திப்பது தவறா என்று கேள்வியும் எழுப்பினார். தைரியம் இருந்தால் தன் மீது தி.மு.க தலைமை நடவடிக்கை எடுக்கட்டும் என்றும் பேட்டி அளித்திருந்தார்.

இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக தலைமை நடவடிக்கை எடுத்தது,

இதை எதிர்த்து கு.க.செல்வம் தரப்பில் நிதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில்,  “நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு லிஃப்ட் வசதி செய்து தரக்கோரி மத்திய ரயில்வே அமைச்சரை சந்திக்க டெல்லி சென்றேன். அவரை சந்திக்க முடியவில்லை.

ராமர் கோவில் கட்டுவதற்காக ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.  அப்போது,  நான் பா.ஜ.க-வில் இணையவில்லை என்று பத்திரிகைகளில் தெளிவாக கூறினேன். இருந்தாலும் என்னை கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர்.  என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த சென்னை நகர சிவில் நீதிமன்ற நீதிபதி ஜெ.பாரதி, கு.க.செல்வத்தை தி.மு.க-வில் இருந்து நீக்கியதற்கு விளக்கம் அளிக்கும்படி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச செயலாளர் துரைமுருகன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.