குலசை தசரா திருவிழா: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரசித்தி பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாளை (புரட்டாசி மாதம் 24ம் நாள்) புதன்கிழமை கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்குகிறது.

இத்தலத்தில்  சிவன், பார்வதி இருவரும் ஞானமூர்த்திஸ்வரர் முத்தாரமன் சமேதகராக காட்சி அளிக்கின்றனர்.

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக குலசை முத்தாரம்மன் கோயிலில் வெகு விமரிசையாக தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெற இருக்கும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மஹிஷா சூரசம்ஹாரம் வரும் 19 ம் தேதி நள்ளிரவு நடைபெறுகிறது.

இதில் சிறப்பு அம்சமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, காளி, புலி, குரங்கு உள்ளிட்ட பல வேடங்கள் அணிந்து ஆடிபாடி வழிபட உள்ளனர்..

இதையொட்டி  இன்று  மதியம் 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு காப்பு கட்டுதல் பூஜையும் நடைபெறுகிறது.

பக்தர்கள்  விரதமிருந்து காளி வேடம் தரித்து தசராவை சிறப்பிக்கும் காட்சி

கொடியேற்றம்:

முதலாம் திருநாளான அக்டோபர் 10ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதி உலா, காலை 9 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவில் அன்னை முத்தாரம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

10/10/2018:

1-ம் திருநாள் இரவில் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலம்

11/10/2018:

2–ம் திருநாள் இரவில் கற்பகவிரிசம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலம்.

12/10/2018:

3–ம் திருநாள் இரவில் ரிஷபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலம்.

பக்தர்கள் வேடம் தரித்து தசராவை சிறப்பிக்கும் காட்சி

13/10/2018:

4–ம் நாள் இரவில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலம்.

14/10/2018:

5–ம் திருநாள் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலம்.

15/10/2018:

6–ம் திருநாள் இரவில் சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலம்.

16/10/2018:

7–ம் திருநாள் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலம்.

17/10/2018:

8–ம் திருநாள் இரவில் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலம்.

18/10/2018:

9–ம் திருநாள் சரஸ்வதி பூஜை அன்று இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலம்.

பக்தர்கள் வேடம் தரித்து ஆடல் பாடலுடன் தசராவை சிறப்பிக்கும் காட்சி

19/10/2018: (சூரசம்காரம்)

10–ம் திருநாளான ஐப்பசி 2ம் நாள் அக்டோபர் 19ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை,

நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி, மகிஷாசுரனை வதம் செய்யும் மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது.

20/10/2018:

11–ம் திருநாள் அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.

அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவிலுக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் முடிந்து, அதிகாலை 3 மணிக்கு திருத்தேரில் பவனி வந்து தேர் நிலையம் வந்தடைகிறார்.

பாலாபிஷேகம்:

காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதி உலா புறப்படுதல், மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்தல், மாலை 6 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.

21/10/2018:

12–ம் திருநாளான அக்டோபர் 21ந்தேதி (ஞாயிறுக்கிழமை ) காலையில் அபிஷேக ஆராதனைகள், மதியம் சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது…

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் என்ற ஊரில் அமைந்திருக்கும் முத்தாரம்மன்  திருக்கோயிலில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத் தொடக்கத்தில் தொடர்ந்து 12 நாட்கள் தசரா திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் தசரா திருவிழா  கோலாகலமாகத் தொடங்கி உள்ளது.

இந்த விழாவில் தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் திரளாக கலந்துகொள்வது வழக்கம். புகழ்பெற்ற இந்த தசரா  திருவிழா தொடங்குவதற்கு நாற்பது நாட்களுக்கு முன்பிருந்தே, இதில் வேஷம் போடுவதாக நேர்த்திக்கடன் செய்திருப்பவர்கள்  விரதமிருக்க துவங்கிவிடுகிறார்கள்.

திருவிழாவின் ஒவ்வொரு நாளும் ஆட்டம் பாட்டமென ஆரவாரமாக நடைபெறும். விசேஷ பூஜைகள், தேர்பவனி, அன்னதானம் என 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் இத்திருவிழாவின் பத்தாவது நாளில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சி, மைசூரு தசராவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அளவில் குலசேகரப்பட்டினத்தில் தான் நடைபெறுகிறது.

இங்கு சிவனும், பார்வதியிம்,  “ஞானமூர்த்தீஸ்வரர் – முத்தாரம்மன்’ என்ற பெயரில் வீற்றிருக்கின்றனர்.   அம்மை யும் அப்பனும் ஒரு சேர வீற்றிருக்கும் திருக்காட்சி வேறு எந்தவொரு திருக்கோயிலிலும் காண இயலாத அற்புதக் காட்சியாகும்.

வினை மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து முத்தாரம்மனை வழிபட்டால், குறைகளை நீங்கிச் சிறப்புடன் வாழ்வாங்கு வாழலாம் என்பது நம்பிக்கை. இவ்விழாவுக்காக பக்தர்கள் ஆடி மாதத்திலிருந்தே விரதம் கடைபிடித்து, மாலைபோட்டுக்கொண்டு தயாராகிவிடுவர்.

பலவகையான வேடங்களில் திருக்கோயிலில் வலம்வருவது, அக்னிச்சட்டி எடுத்தல், நேர்த்திகடன் செலுத்துதல் போன்ற வழிபாடுகளில் பக்தர்கள் முழ்கியிருப்பர். அதனைத் தொடர்ந்து நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சி, தேர்பவனி, காப்பு அவிழ்த்தல் போன்ற நிகழ்ச்சிகள் குலசை திருவிழாவின் முக்கியமான அங்கங்களாக கருதப்படுகிறது.