டில்லி: குல்பூஷன் ஜாதவ் வாக்குமூலம் குறித்த பாகிஸ்தான் வெளியிட்ட இரண்டாவது வீடியோ போலியானது என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.:

உளவுபார்த்ததாக கூறி, இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் கைது செய்து தூக்கு தண்டனை விதித்துள்ளது.  இதை எதிர்த்து இந்தியா சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நீதிமந்றம் ஜாதவ் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், கருணை கேட்டு விண்ணப்பிப்பது போன்ற வீடியோ ஒன்றை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ போலியானது என பாதுகாப்பு  இந்திய நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாதுகாப்பு நிபுணர் சிவாலி தேஷ்பாண்டே தெரிவித்ததாவது: “ பாகிஸ்தான் மீண்டும் ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போது ஜாதவ் குற்றத்தை ஒப்பு கொண்டது போன்ற வீடியோவை வெளியிட்டு இருக்கிறது.  இந்த வீடியோவை பார்க்கும் குழந்தை கூட அது போலியானது என்பதை உணர்ந்துவிடும்.

இந்த வீடியோவில் ஜாதவ் முகத்தில் தழும்புகள் உள்ளன. இதனை பார்க்கும் போது, அவர் சிறையில் கொடுமைபடுத்தியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. இது ஐஎஸ்ஐயின் திட்டமிட்ட சதி. இதே போல் பாகிஸ்தான் தொடர்ந்து ஏமாற்றினால், இந்தியா தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்”என்று தெரிவித்தார்.

சுஷில் தேஷ்பாண்டே என்பவர் கூறியதாவது: சிறையில், ஜாதவ் கொடுமைபடுத்தப் பட்டுள்ளார். முதலில் பாகிஸ்தான் வெளியிட்ட போலி வீடியோவை பார்க்க சர்வதேச கோர்ட் மறுத்துவிட்டது. தற்போது இரண்டாவது முறையாக வீடியோ வெளியிட்டுள்ளது. இறுதி தீர்ப்பு வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என பாகிஸ்தானுக்கு சர்வதேச கோர்ட் உத்தரவிட்ட போது, எப்படி இந்த வீடியோவை வெளியிட முடியும். இதன் மூலம் தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.