டில்லி

குல்பூஷன் ஜாதவ் குடும்பத்தினருக்கு நடைபெற்ற கொடுமைகளைக் குறித்து எதிர்கட்சியான காங்கிரஸ் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்தியாவின் கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் உளவு வேலை பார்த்தாகக் கூறி பாகிஸ்தான் அரசு அவரைக் கைது செய்து மரண தண்டனை விதித்துள்ளது.    பல போராட்டங்களுக்குப் பின் அவரது தாயும், மனைவியும் அவரை சந்திக்க அனுமதி கிடைத்து அவரை சந்தித்தனர்.   அப்போது அவரது மனைவியின் தாலி மற்றும் குங்குமப் பொட்டை அகற்றிய பின்னரே பாகிஸ்தான் அரசு அவர்களை அனுமதித்துள்ளது.  மேலும் ஜாதவின் தாயார் தங்களின் தாய் மொழியில் பேசவும் கூடாது என தடுக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பல அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.   காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி, “இந்த விவகாரத்தில் ஆளும் பாஜக அரசு அந்தக் குடும்பத்தினருக்கு சரியான பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டது.   இது இந்த அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள தோல்வியை எடுத்துக் காட்டுகிறது.   அரசு நினைத்திருந்தால் பாகிஸ்தான் அரசின் வெளியுறவு அமைச்சகத்துடன் முன்பே தொடர்பு கொண்டு ஜாதவின் குடும்பத்தை மரியாதையுடன் நடத்தத் தேவையான ஏற்பாடுகளை செய்திருக்கலாம்” எனக் கூறி உள்ளார்