காவிரி ஆணயம் : கர்நாடக உறுப்பினர்களை நியமித்த முதல்வர்
பெங்களூரு
காவிரி ஆணயத்தின் கர்நாடக மாநில உறுப்பினர்களை கர்நாடக முதல்வர் குமாரசாமி நியமித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை ஒட்டி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்தது. அத்துடன் காவிரி ஒழுங்காற்று குழு பெங்களூருவை தலமையிடமாகக் கொண்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டது. கர்நாடக முதல்வர் குமாரசாமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்திய பின் ஆணையம் அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.
கர்நாடக அரசு ஆணயம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவுக்கான கர்நாடக மாநில உறுப்பினர்களை நியமிக்காமல் இருந்தது. அதனால் கடந்த 22ஆம் தேதி மத்திய அரசே தற்காலிக கர்நாடக உறுப்பினர்களை நியமித்தது. கர்நாடக முதல்வர் குமாரசாமி தங்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காமல் உறுப்பினர்களை நியமித்ததாக குற்றம் சாட்டினார்.
நேற்று மாலை இது குறித்து பெங்களூருவில் முதல்வர் குமாரசாமி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் குமாரசாமி, “கர்நாடக மாநிலத்தின் சார்பில் காவிரி ஆணய உறுப்பினராக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் நியமிக்கப்படுகிறார். அதே போல் காவிரி ஒழுங்காற்றுக் குழு உறுபினராக பிரசன்னா நியமிக்கப்படுகிறார்” என அறிவித்தார்.