ஸ்ரீராம் சேனா தலைவர் மீது நடவடிக்கை : குமாரசாமி உறுதி

டில்லி

கௌரி லங்கேஷ் கொலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய ஸ்ரீராம் சேனா தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையாளிக்கும் இந்து அமைப்பான ஸ்ரீராம் சேனாவுக்கு தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளியாகின.   இதை ஒட்டிஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் ஒரு கூட்டத்தில், “கௌரி லங்கேஷ் கொலைக்கும் ஸ்ரீராம் சேனாவுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை.  இந்து அமைப்புக்கள் அவரைக் கொலை செய்ய திட்டமிட்டதாக கூறுவது தவறு.   காங்கிரஸ் ஆட்சியில் மகாரஷ்டிராவிலும் கர்நாடகத்திலும் தலா இரு கொலைகள் நடந்தன.   ஆனால் காங்கிரஸ் ஆட்சியை யாரும் குறை கூறவில்லை.

தற்போது பிரதமர் மோடி இது குறித்து ஒன்றும் சொல்லவில்லை என பலரும் கூறுகின்றனர்.    இதற்கு மோடி என்ன சொல்வார்?  கர்நாடகாவில் ஒவ்வொரு முறை ஒரு நாய் இறக்கும் போதும் பிரதமர் கருத்து தெரிவிக்க வேண்டுமா?” என கேள்வி கேட்டார்.   இது நாடெங்கும் சர்ச்சையை உண்டாக்கியது.   பிரமோத் முத்தலிக் அதன் பிறகு தாம் யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கேவலமாக பேசவில்லை என விளக்கம் அளித்தார்.

பிரமோத் இவ்வாறு பேசியதற்கு பல அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.    ஜிக்னேஷ் மேவானி, பிரகாஷ் ராஜ்,  காங்கிரஸ் தலைவர்களில் பலர் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் பிரமோத் பேசியதற்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

டில்லியில் உள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்விகள் கேட்டனர்.   அப்போது, “பிரமோத் முத்தலிக்காக இருந்தாலும் சரி அல்லது வேறு யாராவதாக இருந்தாலும் சரி அனைவரும் அரசுக்கு ஒன்றுதான்.   சட்டத்துக்கு விரோதமாகவோ சட்டவிரோத நடவடிக்கைகளை ஆதரித்து பேசினாலோ நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என உறுதி அளித்துள்ளார்.