அரசியல் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக குமரி அனந்தன்: அரசு மருத்துவமனையில் சிகிச்சை

சென்னை,

மிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் உடல் நலமில்லாமல் சிகிசிச்சை பெற்று வருகிறார்.

அரசியல் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக  குமரி அனந்தன்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மதநல்லிணக்கம், நதிகள் இணைப்பு, மது ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு வலியுறுத்தி சென்னையில் இருந்து பாப்பாரப்பட்டிக்கு தொடர்ந்து 21 நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து அங்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஆனால், போலீசார் அவருக்கு அனுமதி மறுத்து  சென்னைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சென்னை வந்தும் தனது  உண்ணாவிரதத்தைத் குமரி அனந்தன் தொடர்ந்தார்.

இதையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் கேட்டுக்கொண்ட தால், உண்ணாவிரதத்தை அவர் முடித்துக்கொண்டார்.

பின்னர், நவம்பர் 3ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை தலைமைச்செயலகத்தில் சந்தித்த குமரி அனந்தன் மதநல்லிணக்கம், நதிகள் இணைப்பு, மது ஒழிப்பும் ஆகிய பிரச்சினைகளில் தமிழக அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை இன்னும் எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி மனு கொடுத்தார்.

அப்போது ஜெயலலிதா அறிவித்தபடி படிப்படியாக மதுக்கடைகளை மூட வலியுறுத்தினார்.

இதன்பிறகு தொடர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 4-ம் தேதி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், குமரி அனந்தனின் உடல்நலம்  பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தன்னை, அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக  அனுமதிக்க குடும்பத்தினரிடம் வற்புறுத்தியதால், அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை யில் அனுமதித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன், 4 முறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை எம்பியாகவும் இருந்தவர். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தவர்.

இவரது மகளும், தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் ஒரு மருத்துவர். மருமகன் சவுந்தரராஜன் பிரபல சீறுநீரகவியல் மருத்துவர். பேரன், பேத்தியும் மருத்துவர்களாக உள்ளனர்.

அதேபோல் பிரபல வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான வசந்த் அண் கோ நிறுவனத்தின் தலைவரும், நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவுமான எச்.வசந்தகுமார் இவரது சகோதரர் ஆவார்.

இத்தகைய பின்புலம் கொண்ட அவரால், மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். ஆனால் எளிமையான வாழ்க்கையையே விரும்பும் குமரி அனந்தன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், குமரி அனந்தன் போன்ற பிரபலங்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன் பல ஆண்டுகளாகவே தனது உடல்நலம் தொடர்பான விஷயங்களுக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.