கைவினைப் பொருட்களின் கருவூலமாக மாறும் கும்பகோணம்: மக்கள் வரவேற்பு

--

பழமைக்கு பெருமை சேர்க்கும் கைவினைப் பொருட்களின் கருவூலமாக கும்பகோணம் நகரம் மாறி வருவது, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பழமை மாறாமலும் அதே நேரத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டு விளங்கும் சிலைகள் செய்யும் தொழில்களின் கூடாரமாக  திகழ்ந்து பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறது கும்பகோணம் நகரம். கும்பகோணம் நகரின் மையத்தில் ஓடும் காவிரி ஆறு ஒவ்வொரு தொழிலுக்கும் மிகவும் மூலகாரணமாகவும், முக்கியமானதாகவும் விளங்கி வருகிறது. தஞ்சை பெரிய கோயிலை கட்டுவதற்காக செஞ்சி பகுதியிலிருந்து சோழர்கள் ஆட்சியில் வந்த சிற்ப கலைஞர்கள் பெரிய கோயிலை கட்டி முடித்ததும், கங்கைகொண்ட சோழபுரத்தையும், தாராசுரம் ஐராவதீஸ்வரர்கோயிலையும் கட்டினர். தாராசுரம் கோயிலை கட்டி முடித்த அந்த சிற்ப  கலைஞர்கள் அப்படியே சுவாமிமலை பகுதியில் தங்கினர். அப்போது சுவாமிமலையின் வழியாக வங்க கடலுக்கு செல்லும் காவிரி ஆற்றில் படிந்து வரும்  வண்டல்மண்ணை கொண்டு ஐம்பொன் சிலைகளை வடிவமைக்க தொடங்கினர். ஆரம்ப காலத்தில் உள்ளூர் கோயில்களிலும், வீட்டு பூஜையறைகளிலும் வைத்து வழிபடுவதற்காக பித்தளை, ஐம்பொன் சிலைகளை வடிவமைத்தனர் இந்த சிற்பிகள். சோழ மன்னர்களின் ஆஸ்தான சிற்பிகளாக விளங்கிய இந்த சிற்பிகளின் கைவண்ண சிலைகளை உள்ளூருக்கு சுற்றுலா வரும் போது பார்வையிட்டு வெளிநாட்டினர் தங்களுடைய வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு கோயில்களில்  வைப்பதற்காக சுவாமிமலையிலிருந்து ஐம்பொன்னால் செய்யப்பட்ட சுவாமி சிலைகளை வாங்கிச் செல்ல ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் ஒரு சில குடும்பத்தினர் மட்டும் செய்து வந்த ஐம்பொன் சிலை தொழிலில் இன்று 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் செய்து வருகின்றனர். உள்ளூர் தொழிலில் பிரகாசித்து வந்த ஐம்பொன்சிலை சிற்பத் தொழில் நாளடைவில் விரிவடைந்து சர்வதேச அளவில் புகழ்பெற்று, தமிழகத்தின் கைவண்ணம் இன்று நாடெங்கும் புகழ் பெற்று விளங்கி வருகிறது. அதே போல், நாச்சியார்கோயில் குத்துவிளக்கு, காவிரி மற்றும் அரசலாற்றிலிருந்து கிடைக்கும் வண்டல் மண்ணால் உருவாக்கப்படும் குத்துவிளக்கு, தாளம் ஆகியவை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இன்று பிரசித்தி பெற்று விளங்குகிறது. நாச்சியார்கோயிலில் உற்பத்தியாகும் குத்துவிளக்கு 5 முக அமைப்பை கொண்டது. குத்துவிளக்கு உற்பத்தியில் சிறந்துவிளங்குவதில் காப்புரிமை பெற்ற ஊராக நாச்சியார்கோயில் திகழ்கிறது. இந்த ஊரில் ஒவ்வொரு குடும்பத்திலும் குத்துவிளக்கு உற்பத்தியும், தாளமும் குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குத்துவிளக்கு உற்பத்தி எந்த அளவுக்கு கும்பகோணம் பகுதியில் மேம்பட்டுள்ளதோ, அதே அளவில் பட்டு புடவை வடிவமைப்பிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது. தாராசுரம், கும்பகோணம், திருபுவனம், திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளில் பெரும்பான்மையாக வசித்து வரும் சௌராஷ்டிர சமூகத்தினர். இத்தொழிலில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். திருபுவனத்தில் வடிவமைக்கப்படும் திகோ சில்க்ஸ் பட்டு உலக அளவில் சிறப்பிடம் பெற்றது. பட்டு உற்பத்தி மட்டுமின்றி கைத்தறி தொழிலும் கும்பகோணம் பகுதியில் சிறப்பாக உள்ளது. அதனால் தான் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலகம் தஞ்சை, நாகை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு செயல்பட்டு வருகிறது.

கும்பகோணம் நகரில் வணிக  பெருக்கத்தை நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொழில் தான் எவர்சில்வர் உற்பத்தி மற்றும் விற்பனை. கும்பகோணம் பேட்டை தெரு, வலையப்பேட்டை முதலிய இடங்களில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட எவர்சில்வர் பட்டறைகள் உள்ளன. இத்தொழிலில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் பித்தளை பாத்திரங்கள் வடிவமைப்பிலும் விற்பனையிலும் கும்பகோணம் நகரம் சிறப்பு பெற்றது. இங்கு வடிவமைக்கப்படும் பித்தளை பாத்திரங்கள் எடை கூடுதலாகவும், தரமானதாகவும் இருப்பதால் தமிழகம் முழுவதிற்கும் இங்கிருந்து நாள்தோறும்  பாத்திரங்கள் செல்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கிய சாக்பீஸ் உற்பத்தி கும்பகோணத்தை சுற்றிலும் குடிசைத் தொழிலாக இன்றும் நடைபெற்று வருகிறது. இங்கு  உற்பத்தியாகும் சாக்பீஸ் வடமாநிலங்களில் நல்ல சந்தையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தோடு கும்பகோணம் சாக்பீஸ் தரத்தில் போட்டி போட்டு வருகிறது. கும்பகோணத்தை சுற்றி காவிரி ஆறு, அரசலாறு, குடமுருட்டி ஆறு, முடிகொண்டான் ஆறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகள் ஒடுவதால் விவசாயமும்  நல்ல நிலையில் உள்ளது. நெல் உற்பத்திக்கு அடுத்த நிலையில் கரும்பு சாகுபடி முக்கியத்துவம் பெற்று வருகிறது.

விவசாயிகளின் கரும்புகளை எடுத்து கொள்வதற்காக கும்பகோணம் அருகில் திருமண்டங்குடி, துகிலி சர்க்கரையும் செயல்பட்டு வருகிறது. விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக ஆடுதுறையில் நெல் ஆராய்ச்சி நிலையமும், சாக்கோட்டை விதை, மண் பரிசோதனை நிலையமும் செயல்பட்டு வருகிறது. குடந்தையைச் சேர்ந்த அனைத்து  சிறப்புகளும் வணிக பெருமக்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் தொழிலாளர்களுக்குமே உரியதாகும்.