Random image

கும்பகோணம் பள்ளி தீ விபத்து : இன்னும் மாறாத சோகம்

கும்பகோணம்

ன்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில்  தீ விபத்து ஏற்பட்டு நாட்டையே பதை பதைக்க வைத்தது.

கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளி வளாகத்தில் 477 குழந்தைகள் படித்து வந்தனர்.   அதில் சரஸ்வதி மழலையர் பளி மற்றும் தொடக்கப்பள்ளி  மற்றும் உயர்நிலைப் பள்ளியும்  அடங்கும்.   இந்தப் பள்ளியில் மேல் மாடியில் தென்னங்கீற்று கூரையுடன் சமையல் அறை இருந்தது.  அதில் மாணவர்களுக்கான மதிய உணவு தயாரிப்பது வழக்கம்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஜுலை 16 ஆம் நாள் அந்த கூரையில் பிடித்த தீ பள்ளி வளாகம் முழுவதையும் எரித்ததோடு அல்லாமல் பல பெற்றோர்கள் வயிற்றையும் தீ இல்லாமலே எரிய வைத்தது.   இந்த விபத்தில் 7 வயதில் இருந்து 11 வயதுக்குட்பட்ட 94 குழந்தைகள் உடல் கருகி உயிர் இழந்தனர்.  சுமார் 18  பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.    இந்த நிகழ்வு நாடு முழுவதும் உள்ள மக்களை கலங்க வைத்தது.

இந்த விபத்துக்குப் பிறகு பள்ளிக்கூட பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டன.   விதிகளை பின்பற்றுவதை சரிவர கவனிக்க தவறிய அரசின் மிது நீதிமன்றம் குற்றம் சாட்டியது.    குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.    இந்த வழக்கில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.   மொத்தம் 488 பேர் சாட்சி அளித்தனர்.   பள்ளியின் நிறுவனர் அவர் மனைவி உள்ளிட்ட பலருக்கு தண்டனை அளிக்கப்பட்டது.

ஆயினும் குழந்தைகளை இழந்த பெற்றோரின் துயரம் இன்னும் அவர்கள் மனதில் இருந்து மறைய வில்லை.    மாறாத சோகத்துடன் இன்னும் அந்த மழலைகளின் பெற்றோர் உள்ளனர்.