கும்பகோணம் பள்ளி தீ விபத்து இழப்பீடு மோசடி: வழக்கறிஞரை சஸ்பெண்டு செய்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

கும்பகோணம்:

டந்த 2004ம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற கோரமான பள்ளி தீ விபத்தில் பலியான 49 மாணவர்கள் கருகி இறந்தனர்.

இது தொடர்பான வழக்கில், அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகையை, அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் தமிழரசன்  முறைகேடாக எடுத்துக் கொண்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுமீதான ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதிகள்  ஆர். மகாதேவன், வி. பார்த்திபன் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் தமிழரசனை கண்டித்தனர். மேலும், இந்த விவகாரத்தில், உத்தரவு பிறப்பிக்கும் முன்பு இழப்பீட்டு பணத்தை, உரியவர்களிடம்  திருப்பி அளிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால் தமிழரசன் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.  இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மகாதேவன் மற்றும் பார்த்திபன் அடங்கிய அமர்வு, வழக்கறிஞர் தமிழரசனின் மோசடியை விசாரிக்கும்படி, சிபி.சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழரசனின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கவும்,  அவரை வழக்கறிஞர் தொழிலில் இருந்து சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில்  வழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து, 5 ஜுன் அன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, பார் கவுன்சில் ஆப் இந்தியாவின் துணைத் தலைவர் பிரபாகரன். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன் ஆகியோர் வாதாடியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.