கும்ப மேளா : இரண்டே நாட்களில் ஹரித்வாரில் 1000 பேருக்கு மேல் கொரோனா

ரித்வார்

ட்சக்கணக்கான மக்கள் கும்ப மேளா விழாவுக்காக ஹரித்வார் வந்துள்ள நிலையில் சுமார் 1000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் நகரம் மிகவும் பிரபலமான ஆன்மீக நகரங்களில் ஒன்றாகும்.   கங்கை நதி இமயமலையில் இருந்து சமவெளியில் முதல் முதலாக இறங்கும் இந்த இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளா விழா கொண்டாடப்படுகிறது.   அவ்வகையில் தற்போது கும்ப மேளா விழா நடந்து வருகிறது.

தற்போது நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரித்துள்ளதால் இங்குக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு  விழா நடந்து வருகிறது.  லட்சக் கணக்கானோர் கூடும் இடத்தில் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றுவது கடினம் என்பதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் எனப் பலரும் எச்சரிக்கை விடுத்தனர்.  ஆனால் அரசு அதைக் கருத்தில் கொள்ளாமல் விழாவைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

நேற்று முன் தினம் ஷாகி ஸ்னான் தினம் என்பதால் கங்கையில் குளிக்க லட்சக் கணக்கானோர் ஹரித்வாருக்கு வந்துள்ளனர்.   இவர்களில் பலர் கொரோனா கட்டுப்பாட்டைக் கருத்தில் கொள்ளவில்லை.  ஹரித்வாரில் பல இடங்களில் மக்கள் முகக் கவசம் அணியாமலும் சமுதாய இடைவெளியைப் பின்பற்றாமலும் உள்ளனர்.

இதனால் உத்தராகாண்ட் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1925 பேர் பாதிக்கப்பட்டு 13 பேர் உயிர் இழந்துள்ளனர். இதில் ஹரித்வார் நகரில் கடந்த திங்கள் கிழமை அன்று 408 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  நேற்று 594 பேருக்கு கொரோனா உறுதி ஆகி உள்ளது.   கொரோனா குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் நகர் முழுவதும் உள்ள போதும் விதிமீறல்கள் மிகவும் சகஜமாக நடந்து வருவதே உண்மை நிலை ஆகும்.