அஸ்வினை அணியில் சேர்க்கும் வழிகளை கண்டறியுங்கள் – சொல்பவர் கும்ப்ளே

மும்பை: சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை அணியில் சேர்ப்பதற்கான வழிவகைகளை இந்திய அணி நிர்வாகம் ஆராய வேண்டுமென கோரியுள்ளார் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் கேப்டனுமான அனில் கும்ப்ளே.

அவர் கூறியுள்ளதாவது, “இன்றுவரையிலும் இந்திய அணியின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளராக நீடிக்கிறார் அஸ்வின். எனவே, அவரை அணிக்குள் எடுக்கும் வாய்ப்புகள் குறித்து இந்திய அணி நிர்வாகம் யோசிக்க வேண்டும்.

கடந்த ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்திலிருந்தே காயம் காரணமாக அவருக்கு டெஸ்டில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், அதற்கு முன்னதாக இங்கிலாந்து தொடரிலும் காயம் காரணமாக அவரால் சோபிக்க முடியவில்லை. மற்றபடி, அவரின் செயல்பாட்டில் எந்தக் குறையையும் கண்டறிய முடியாது.

காயங்கள் இருந்தாலும், கடைசியாக ஆடிய 7 வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, 30.16 என்ற சராசரியை வைத்துள்ளார். எனவே, அவர் அணிக்கான ஒரு சிறந்த தேர்வு.

அவரின் பேட்டிங் செயல்பாடும் சிறப்பானதாகவே இருக்கிறது. மொத்தம் 4 சதங்கள் மற்றும் 11 அரை சதங்களை அடித்துள்ளார். எனவே, அடுத்துவரும் போட்டிகளில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரையுமே சேர்ப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும்” என்றுள்ளார் கும்ப்ளே.