முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மதுரை கலெக்டரிம் இளைஞர்கள் மனு அளித்துள்ளனர்.

கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கியதாக மாணவி வளர்மதி சில தினங்களுக்கு  முன் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு தொடரப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைக் கண்டித்து நாடு முழுவதும் வளர்மதிக்கு ஆதரவாக போராட்டம் நடந்து வருகிறது.

இதற்கிடையே கடந்த 30ம் தேதி கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்தியதால் பேராசிரியர் ஜெயராமன்  உள்ளிட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்த நிலையில்,  தமிழகத்தில் போராட்டத்தைத் தூண்டுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடை, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடுவதற்கு  எடப்பாடி பழனிசாமி  தலமையிலான தமிழக அரசே காரணம். ஆகவே  மக்களிடையே போராட்டத்தை தூண்டிவிடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மதுரை கலெக்டரிடம் இளைஞர் அமைப்பினர்  மனு அளித்துள்ளனர்.

முதல்வரையே குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.