குற்றம் கடிதல்:1:
2006 தேர்தலில் ஆட்சியைப் பிடித்த திமுக சில மாதங்களிலேயே கடுமையான மின்வெட்டை எதிர்கொண்டது. மின்சார அமைச்சராக இருந்த ஆற்காட்டார் இப் பிரச்னையைச் சமாளிக்க முடியாமல் திணறினார்.  இப் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சிக்குத் தலைவலியாக மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்த முதல்வர் கலைஞர் ஒரு கட்டத்தில் 2011 தேர்தலில் திமுகவுக்கு மின் வெட்டுதான் எதிரியாக மாறும் என்று கூறினார்.
அதேபோல, அம்மாவின் வரலாற்றுச்சிறப்புமிக்க இரண்டாவது முறை ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கப்போவது ‘படிப்படியாக மதுவிலக்கு’ என்ற வாக்குறுதிதான்.
காந்தியவாதி சசிபெருமாள் தொடங்கிவைத்த போராட்டம் தமிழகம் முழுவதும் பற்றியெரிந்தது. எப்படியும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அமையப்போவதில்லை என்ற துணிச்சலில் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மது விலக்குதான் என்று சின்ன மருத்துவர் அன்புமணி அறிவித்தார். எப்படியாவது மக்கள் மனதில் இடம்பிடிக்கும் அவசரத்தில் இருந்த சீமான் மதுபானக்கடைகளை  அடித்து  நொறுக்கி போராடினார். மறுபக்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆங்கேங்கே தன்னிச்சையான போராட்டங்கள் நடத்தி அம்மா அரசால் தடியடிக்கு உள்ளாகினர். போராட்டங்கள் வலுத்தன. முல்லைப்பெரியாறு முதல் கூடங்குளம் வரை ஒரு ரவுண்ட் வந்தும் வேலைக்காகாத வைகோவும் மதுவிலக்கைக் கையிலெடுத்தார்.
ஆனால் ஆளும்கட்சியான அதிமுகவும், முதன்மை எதிர்க்கட்சியான திமுகவும் பற்றி எரியும் இப் பிரச்னைகுறித்து மவுனம் காத்தன. ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பில்லாத சிறிய கட்சிகள் எல்லாம் பூரண விலக்கு அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்துக்கொண்டிருந்தபோது இரண்டு பெரிய கட்சிகளும் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்ற வாதத்துக்குச் சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருந்தன. அரசு மதுபானக்கடைகளுக்கு மது பாட்டில்களை விற்பனை செய்த ஐ.எம்.எப்.எல் மதுபான ஆலைகள் பெரும்பாலும் இந்த இருகட்சிகளைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டன.
அதனால்தான் இந்த தேர்தலில் அதிமுகவும் வெற்றிபெற வில்லை திமுகவும் வெற்றிபெறவில்லை ஐ.எம்.எப்.எல் சிண்டிகேட்தான் வெற்றிபெற்றது என்று கிண்டல் செய்யப்படுகிறது.

ஓவியம்: தமிழ்
ஓவியம்: தமிழ்

கடைசியில், தொலைக்காட்சி நேரலை விவாத நிகழ்ச்சி ஒன்றில் திமுக தரப்புப் பேச்சாளர் பூரண விலக்கு சாத்தியமில்லை என்று விலாவாரியாக விளக்கிக் கொண்டிருக்கும்போதே ’ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும்’ என்ற கலைஞர் அறிக்கை ஸ்குரோலில் ஓடியதை அதிர்ச்சியுடன் பார்க்க நேர்ந்த வினோதமும் நடந்தது. அப்படியும் அதிமுக அசையவில்லை. கடந்த சட்டமன்றத்தின் கடைசிநாட்களில்கூட பூரண மதுவிலக்கு சாத்திமில்லை என்று நத்தம் விஸ்வநாதன் முழங்கினார்.
தேர்தல் நெருங்க, நெருங்க அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் ’ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் முற்றிலுமாக மூடப்படும்’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும் அதிமுக மேடைகளில் மதுவிலக்கு குறித்து எதுவும் பேசப்பட வில்லை. திமுக தேர்தல் அறிக்கைதான் இத் தேர்தலின் கதாநாயகன் என்று கூறப்பட்ட நிலையில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த அம்மா தேர்தல் அறிக்கை ’படிப்படியாக மதுவிலக்கு’ என்றது.
தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வென்றதற்கான பல காரணங்களில் ’படிப்படியாக மதுவிலக்கு’ என்ற வாக்குறுதியும் முக்கியக்காரணாமாகும். குடியில் இருந்து விடுபடாமல் தவித்த ‘குடி’மக்களுக்குக்கூட இந்த வாக்குறுதி பிடித்திருந்தது. படிப்படியாக மது விலக்கு வந்தால் படிப்படியாக குடியில் இருந்து மீண்டு விடலாம் என்ற நம்பினர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் பூரண மதுவிலக்கை விரும்பினாலும் ஒரே நாளில் மது விலக்கு சாத்தியமில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால், நல்ல சாராயத்தில் இருந்து கள்ளச் சாராயத்துக்கோ இதர கொடிய போதைகளுக்கோ தமது வீட்டுஆண்கள் அடிமையாவதைவிட படிப்படியாக மீள்வது நல்லதுதான் என நினைத்தனர்.
அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. பதவியேற்ற அன்றே முதல்வர் மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைத்தார். விரைவில் முதல்கட்டமாக 500 மதுபானக்கடைகள் மூடப்படும் என்றார். இப்போது, காலை 10 மணிக்குத் திறந்த கடைகள் 12 மணிக்குத் திறக்கப்படுகின்றன. இரண்டு நாள் முன்பு தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் கடைகள் மூடப்படுவதை தொலைக்காட்சி செய்திகள் காணொலியாகக் காட்டின.
இப்போது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? மீதமுள்ள ஆறாயிரத்துச் சொச்சம் மதுபான கடைகளும் குறிப்பிட்ட கால வரம்பு அறிவித்து அதற்குள் மூடப்படுமா? அதற்கும் முன்னோட்டமாக மதுபானக்கடைகளின் வேலை நேரத்தை மேலும் குறைக்கப்போகிறதா? அல்லது படிப்படியாக மூடப்படும் என்றுதானே வாக்குறுதி கொடுத்தோம் என்று சொல்லி ஐந்து ஆண்டுகளும் இழுத்தடித்து சொன்னபடியே வாக்குறுதியை நிறைவேற்றப் போகிறார்களா?
இதில் மூன்று முக்கிய அம்சங்கள் தீர்மான சக்திகளாக உள்ளன:
ஒன்று, டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானம்தான் ஏழை மக்களின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுகிறது என்று ஆட்சியாளர்கள் கூறிவந்த நிலையில் மதுவிலக்கு முழுமையாக அமலாகுமானால் அந்த வருமானம் கிடைக்காது. இந் நிலையில் ஏழைகளின் வளர்ச்சித்திட்டங்களுக்கான நிதி திரட்ட மாற்றுவழி என்ன?
இரண்டு, டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில் குறிப்பிடத்தக்க அளவு அதிமுக, திமுக பிரமுகர்களுக்குச் சொந்தமான ஆலைகளில் இருந்து வாங்கப்படுகின்றன. இந்த நிலையில் தங்கள் கட்சியினர் மதுபான ஆலைகள் நடத்துவது குறித்து இக் கட்சிகள் என்ன நிலைபாடு கொள்கின்றன? ஒருகட்டத்தில் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படுமானால் இந்த மதுபான ஆலைஉரிமையாளர்கள் என்ன நிலைபாடு எடுப்பார்கள்?
மூன்றாவதாக, படிப்படியாக மதுவிலக்கு என்பதே குடி அடிமைகளின் மனநிலையை முன்வைத்து எடுக்கப்பட்ட முடிவுதான். அப்படியானால் அவர்களை வேறு போதைகளுக்குச் செல்லாமல் தடுத்தாட்கொள்ள அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?
அப்பணசாமி
அப்பணசாமி

இங்கு முக்கியமான விஷயம் இப்பிரச்னை அறிவியல் பூர்வமாகவோ மனிதாபிமானத்தோடா இதுவரை பார்க்கப்படவே யில்லை என்பதுதான். இதில் உலகளாவிய அனுபவங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அரசியல் லாபம் கருதாமல் அணுகவேண்டும் என்று வல்லுனர்கள் எவ்வளவு கூறியபோதும் அதை எத்தரப்பும் காதில் போட்டுக்கொள்ள வில்லை.
சென்னை உயர்நீதிமன்றம்கூட சிறிது காலத்துக்கு முன்பாக மது விற்பனை கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை விழிப்புணர்வு ஏற்படுத்தச் செலவிட வேண்டும் என்று கூறியது.
குடி அடிமை என்பது பழக்கமல்ல நோய் என்கிறது மருத்துவம். ஒன்றைக் கிடைக்காமல் செய்து தடுப்பதைவிட அது தேவையே இல்லாமல் செய்வதுதான் சிறந்த அணுகுமுறை. குறிப்பாக, குடி அடிமை கீழ்த்தட்டு மக்களை அதிகம் பாதிக்கிறது. இதனால் பெண்களும், குழந்தைகளும் நீண்டகாலம் பாதிக்கப்படுகிறார்கள். அப் பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு மனப்பூர்வமாக குடியிலிருந்து வெளியேறச் செய்ய வேண்டும். இப் பிரச்னையை சமூகப் பிரச்னையாக மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும்.
ஆனால் அம்மா ஆட்சி என்ன செய்யப்போகிறது? டாஸ்மாக்கை மூடுவதால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு மாற்று வழி காணுமா? அதற்கான அறிகுறி  ஆளுநர் உரையில் தெரியவில்லை. இப்போதெல்லாம் ஆளுநர் உரைதான் பட்ஜெட்டில் எதிரொலிக்கிறது. அம்மாவுக்கு அதெல்லாம் பிரச்னை இல்லை. 110 விதியின்கீழ்கூட ஒரு நல்ல நாளில் அறிவிக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் ஐஎம்.எப்.எல் சிண்டிகேட் அனுமதிக்குமா? முக்கிய எதிர்க்கட்சிக்காவது அந்த துணிச்சல் இருக்குமா? அல்லது இதையும் ஒரு அரசியல் லாவணிக் கச்சேரியாக்கி வேடிக்கை காட்டப்போகிறார்களா?
கீழ்த்தட்டு உழைப்பாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. அடுத்து, விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறார்கள். ஆனாலும் வரிகள் அதிகரிக்கிறது. கடன் வலையில் வீழ்த்தப்படுகிறார்கள். கோயில் குளம் என நம்பிக்கை சார்ந்தும் செலவளிக்கிறான். இதையுமீறி அந்த ஏழைத் தொழிலாளி பாக்கெட்டில் எதுவும் மிச்சமிருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் லாட்டரி, மது போன்ற வழிகளில் சுரண்டி கொளுக்கிறது முதலாளித்துவம் என்று கூறுவது உண்மைதானோ?
(மீண்டும் வெள்ளிக்கிழமை சந்திப்போம்.)