அதற்கு அச்சாணியாக இருங்கள் திருமாவளவன்! :   அப்பணசாமி

குற்றம் கடிதல்: 10

தற்போது மக்கள் நலக் கூட்டணியின் அச்சாணியாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ’2019 நாடாளுமன்றத் தேர்தலில் மதவாதமே முன் நிறுத்தப்படும்’ என்று கூறியுள்ளார். இதுதொடர்பாகத் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் பேசிய திருமாவளவன், ‘‘கடந்த சட்டப் பேரவைத்தேர்தலின் போது மது, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட அம்சங்களை கணக்கில் கொண்டு மக்கள் நலக்கூட்டணியில் இருந்தோம். ஆனால், மக்களவைத் தேர்தலில் நாடு தழுவிய அளவில் மதச்சார்பற்ற அணி வெற்றி பெற வேண்டும் என்பதேஎங்கள் எண்ணம்” என்றார். அதே நேரத்தில் எக்காரணம் கொண்டும் பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.

திருமாவளவன்
திருமாவளவன்

திருமாவளவன் மதச்சார்பற்ற சக்திகள் என்று கூறியது, திமுக,காங்கிரஸ் அணியைத்தான் என்று கூறப்படுகிறது.

இன்னும் ஆறு மாதங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது குறித்தே அரசியல் கட்சிகள், இன்னமும் தங்கள் கருத்தினைத் தெரிவிக்காத நிலையில்,  இன்னும் சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து திருமாவளவன்  கருத்து தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் மக்கள் நலக் கூட்டணியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டது. அச்சாணியே கழன்றால் வண்டி எப்படி ஓடும்?

இதே நேர்காணலில் மற்றொரு கருத்தினையும் திருமாவளவன் கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் என்பது தல நிலைமைகளைக் கொண்டு நடைபெறும். கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் வேட்பாளர்களின் செல்வாக்கு, செயல்பாடு, சாதி போன்ற பிற அம்சங்களே இதில் முக்கியப் பங்களிக்கும் என்று கூறிய அவர் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பது பெரும்பாலும் பெயரளவுக்காகத்தான் இருக்கும் என்பதையும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

“இது திருமாவளவனின் தனிப்பட்ட கருத்து” என்று வைகோ தெரிவித்ததாக செய்தகள் வருகின்றன.

மக்கள் நலக்கூட்டணி
மக்கள் நலக்கூட்டணி

\மக்கள் நலக் கூட்டணி என்பது தேர்தல் கூட்டணியாக மட்டும் அல்லாமல் மக்கள் பிரச்சனைகளுக்கான தொடர் இயக்கமாகவும் அமையும் என்று முன்னர் கூறப்பட்டதற்கு எதிராக திருமாவளவனின் இந்த நேர்காணல் உள்ளது. பொதுவாகத் தேர்தல் கூட்டணிகள் என்பவை தேர்தல் நேரத்தோடு முடிந்து விடுகிறது. இதனால் மக்கள் பிரச்சனைகளில் ஒரு வலுவான கூட்டியக்கம் என்பது கானல் நீராக இருக்கிறது. இதனால் ஏராளமான பிரச்சனைகளில் மக்கள் கருத்து என்பது திரட்டப்படாமல், ஒருங்கிணைக்கப்படாமல் அப் பிரச்சனைகள் குறித்துப் பொதுக்கவனம் பெறப்படுவதில்லை.

மதுவிலக்கு, ஆணவக்கொலைகள், கருத்து சுதந்திரம் தொடங்கி மணல் கொள்ளை வரை ஏராளமான பிரச்சனைகள் தொலைக்காட்சி விவாதங்களில் மட்டும் பரபரப்புக்காக இடம் பெற்று மங்கி, மறைந்து போகின்றன. குறிப்பாக, அண்மைக்காலமாக அதிகரித்து வரும் ஆணவக் கொலைகள், கருத்துரிமை, பேச்சுரிமை பறிப்பு போன்ற முக்கியப் பிரச்சனைகள் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டவையாகவே பார்க்கப்படுகின்றன. இதில் மக்கள் நலக் கூட்டியக்கம் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவில் மக்களைத் திரட்டி வந்த நிலையில் இன்னும் இரண்டே முக்கால் ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக மக்கள் நலக் கூட்டணியின் அச்சாணியை ஏன் இப்போதே உருவ வேண்டும்?

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் மதவாதம் மட்டும்தான் முன்னிலைப்படுத்தப்படுமா? அதற்கு மாற்றாக காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படுமா? மத்திய அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் போன்றவை முன்னிலைப்படுத்தப்பட வாய்ப்பில்லையா? காங்கிரஸ் கட்சி தேய்ந்து கட்டெறும்பானதற்கு அதன் தவறான பொருளாதாரக் கொள்கைகளும் ஒரு முக்கிய காரணமில்லையா?

கேப்டன் நலக்கூட்டணி
கேப்டன் நலக்கூட்டணி

நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சியும்தான் படுதோல்வி அடைந்துள்ளது. இன்னும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், குஜராத், இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநில சட்ட மன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதன் பின்னரே நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் மனநிலை என்ன என்பது ஓரளவுக்குத் தெரிய வரும். மேற்சொன்ன 12 மாநிலத் தேர்தல்களிலும் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெறப் போகிறதா?

தற்போது நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவை மதவாதமும் பொருளாதாரக் கொள்கையும் ஆகும். தாராளமயமாக்கலால் இந்தியா அமெரிக்காவின் அடிமையாகி வருகிறது. மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளைப் பேசுவதற்கு நாதியேயில்லாமல் இருக்கிறது. எப்படி தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு மாற்று அவசியமோ அதுபோல இந்திய அளவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கும் மாற்று அவசியமாகும். மேலும், மதவாதத்துக்கு எதிராகப் போராடுவது என்றால் காங்கிரசை விட்டால் வேறு கதியே கிடையாதா? மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றபோதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் இந்து சமுதாயத்தினர் வாக்குகளைக் கவருவதற்காக மென்மையான ’இந்துத்வா’ கொள்கையைக் கடைப்பிடிக்கும் கட்சிதானே காங்கிரஸ் கட்சி. அமெரிக்காவுக்கு இந்தியாவின் கதவுகளை விரியத் திறந்து விடுவதில் காங்கிரசும் பாஜகவும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகத்தானே இதுவரை செயல்பட்டிருக்கின்றன.

இந்தியாவின் செல்வங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்படுகின்றன. மரபணு விதைகள், வறட்சி, கடன் வலையால் பாஜக, காங்கிரஸ் ஆட்சிகளில் லட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை தமிழகத்திலும் தலையெடுத்து வருகிறது. தவறான பொருளாதாரக் கொள்கையால் அதிகம் பாதிப்புக்கு ஆளாவது தலித் மற்றும் பழங்குடியின மக்கள்தான்.

எனவே, “நாடாளுமன்றத் தேர்தலில் மதவாதம்தான் முக்கிய எதிரி. அதை முறியடிக்க காங்கிரசோடு மெகா கூட்டணி” என்பது தவறான கண்ணோட்டம் ஆகும். அதுவும் தமிழகத்தில் பாஜக அச்சுறுத்தும் சக்தியாக வளர்ந்து தனியாக நின்று அதிக இடங்களைப் பெறும் வாய்ப்பு இல்லை. அப்படியே சில இடங்களைப் பெறும் வாய்ப்பு இருக்குமானால் அது அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் மட்டும்தான்.

அதிமுக – பாஜக உடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். அபடியே கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருக்குமானால், அது தேர்தலுக்கு சில மாதங்கள் முன்புதான் தெரிய வரும். அதற்காக இப்போதே ஏன் திருமாவளவன் வியூகம் வகுக்கத் தொடங்குகிறார் என்று தெரியவில்லை.

இப்போது தமிழகத்தில் கொள்கையளவில் உண்மையிலேயே ஒரு மாற்று அரசியல் இயக்கத்தை உருவாக்குவதுதான் அவசியமாகும். இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் இடதுசாரி கட்சிகள், தலித் அமைப்புகள், சிறுபான்மை அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு மாற்று அரசியல் அணி உருவாவதே நல்லது.

வைகோ
வைகோ

சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி என்பது கடுமையான மன வலிதான். அதற்குக் காரணம்கூட மாற்று அரசியல் இயக்கம் பலவீனமாக இருந்ததுதான். கடைசி நேரத்தில் கொள்கையற்ற சில கட்சிகளைச் சேர்த்ததும், ஒருங்கிணைப்பாளர் வைகோ கட்டுப்பாடற்ற முறையில் நடந்து கொண்டதும்தான் பிரதான காரணங்கள். இத் தவறுகளைக் களைந்து வலுப்பெறும் பொன்னான வாய்ப்பாக இடைப்பட்ட காலம் அமையலாம்.

இனியும் மாறி மாறிக் கூட்டணி அமைத்துப் பெரிய கட்சிகளே ஆட்சி அமைக்க உதவாமல், எதிர்காலத்தில் வலுவான, கொள்கை அடிப்படையிலான  மக்கள் தளத்தை உருவாக்குவதே உண்மையான மாற்று இயக்கமாக இருக்கும்.

நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் ஒன்றிரண்டு இடங்களைப் பெருவதா, மக்கள் சக்தியைத் திரட்டுவதா? எது தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை வலுப்படுத்தும்? அதற்கு அச்சாணியாக இருங்கள் திருமாவளவன்.

Leave a Reply

Your email address will not be published.