பாலினப் பாகுபாடுகள் அற்றுப் போவது எப்போது?: அப்பணசாமி

குற்றம்கடிதல்: 15

யர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது ஒரு நண்பன் இருந்தான். அவனது பெயர் மேடைச்செல்வம். கருப்பாக அழகாக இருப்பான். நன்றாகப் படிக்கக்கூடியவன். அவனால் பள்ளியிலேயே முதலாவதாக வர முடியும் என்று ஆசிரியர்கள் கூறுவார்கள். அனைத்துப் பாடங்களிலும் 65 முதல் 70 மதிப்பெண்கள்தான் எடுப்பான். (அப்போதெல்லாம் அதிகபட்சமாக 85 மதிப்பெண்கள்தான் எடுக்க முடியும்.) அவனால் அதற்கும் அதிகமாக மதிப்பெண் பெற முடியாமல் போனதற்குக் காரணம் அவன் அல்ல. வறுமைதான். குழந்தைத் தொழிலாளர் போல பள்ளி முடிந்ததும் வேலை. காலையில் எழுந்ததும் வேலை. பல நாட்கள் பள்ளிக்கும் வரமாட்டான். ஆனாலும் ஓரளவு நல்ல மதிப்பெண்களை எடுப்பான்.

a

கோயிலில் விசேஷ நாட்களில் கடைத்தெருவுக்குப் போனால் ஒரு கடையில் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்திருப்பான். பாடம் படிக்க முடியாத சோகம், பள்ளிக்கு வர முடியாத ஏக்கம் அவன் கண்களில் தேங்கியிருக்கும். ஆனால் அதை யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை. காரணம் அவனது கை விரல்கள் பம்பரமாகச் சுழன்று பூக்கட்டிக் கொண்டிருக்கும். கண் இமைக்கும் நேரத்தில் பல முழ நீளத்துக்குக் கட்டி அதை அம்பாரம் சுற்றுவதைப் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.

அதேபோல என் இன்னொரு சிறு வயது நண்பன் பேராச்சியப்பன். அவனுக்கும் எனக்கும் என் சோட்டுச் சிறுவனுக்கும் பம்பரம், செதுக்கு முத்து, செல்லாங்குச்சி போன்ற விளையாட்டுகளைச் சொல்லிக் கொடுத்தது பேராச்சியப்பனின் அக்காள் ஆவுடைத்தங்கம். அந்த அக்காள் எல்லா விளையாட்டுகளையும் அவ்வளவு அற்புதமாக விளையாடுவாள். அவளிடம் கள்ளாட்டை எடுபடாது. அத்தனை விளையாட்டுகளின் விதிகளும் அந்த அக்காளுக்கு அத்துபடி.

b

இந்த மலரும் நினைவுகள் ஏன் இன்று வந்து அலைமோதுகிறது என்றால், காலையில் ஒரு நாளிதழில் முக்கியப் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியாகியிருந்த இரண்டு புகைப்படங்கள்தான். அப் புகைப்படங்களைத் தற்செயலாகவோ கவனமின்றியோ போட்டிருப்பார்கள் என்று நினைக்கும் அளவுக்கு நமது இதழாளர்கள் அவ்வளவு கூருணர்வு அற்றவர்கள் அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.  மிகக் கவனமாக அல்லது மேலிடத்திலிருந்து வந்த அறிவுரையின்படிதான் அதைப் போட்டிருக்க முடியும்.

ஒரு புகைப்படம், பூக்கட்டும் போட்டியில் சிறுமிகள் கலந்து கொண்டதை விதந்து பாராட்டி எழுதப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த புகைப்படத்தில் பம்பரம் விடுவதில் சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டது போற்றிப் பாராட்டப்பட்டிருந்தது.

சென்னையில் இந்து ஆன்மிகம் மற்றும் சேவைக் (என்ன சேவையோ?) கண்காட்சியில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டதாக விரிவான செய்தியும் வெளியாகியுள்ளது. இதுதான் மேற்கூறிய என் நினைவலைகளுக்குக் காரணம்.

d

இதெல்லாம் ஆண் – பெண் இயல்புகள் போல மிகச் சாதாரணமாகக் கையாளப்படுவதன் பின்னணியுடன் இன்று அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளையும் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

உலகில் கடினமான உழைப்பைக் கோரக்கூடிய பணிகளில் பெண்களே அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்றபோதும் ஆண் என்றால் வலிமையானவன், பெண் என்றால் பலவீனமானவள் என்ற கருத்து ஏன் மீண்டும் மீண்டும் வலிந்து திணிக்கப்படுகிறது.

பெண் ரயில் ஓட்டுகிறார், டிராக்டர் ஓட்டுகிறார், லாரி மெக்கானிக்காக இருக்கிறார் என்றெல்லாம் சொல்வதுகூட ஏதோ பெண்கள் இதுவரை மென்மையான வேலைகளை மட்டும்தான் பார்த்து வந்தனர் என்பதை ஒப்புக்கொள்வது போல ஆகிவிடும். கடுமையான உடலுழைப்பைக் கோரக்கூடிய விவசாயப் பணிகளில் நிலத்தை உழுவதைத் தவிர பிற பணிகளில் அதிகம் ஈடுபடுபவர்கள் பெண்கள்தான். இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கிராமப் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கேற்பு 70 விழுக்காடு என்று ஒரு பொருளாதார ஆய்வு கூறுகிறது. கடுமையான பணிகள் என்று சொல்லப்படும் பணிகளில் பெண்களே முழுவதும் ஈடுபடும் பணிகள் என்று அந்த ஆய்வு மேற்கோள் காட்டும் பட்டியல் மிக நீளமானது.

இதெல்லாம் நமக்கும் தெரியும். ஆனாலும் நீ பெண், பலவீனமானவள், மந்த புத்தி கொண்டவள், மென்மையானவள், அதனால் தனியாக இயங்க முடியாது. ஆணைச் சார்ந்தே இயங்க வேண்டும் என்றும், நீ ஆண், அறிவாளி, பலமானவன், தனியாக இயங்கி சுயமாக முடிவெடுப்பவன், நாட்டையும் குடும்பத்தையும் நிர்வகிக்கும் திறன் படைத்தவன், பெண் உனக்கு அடங்கியவள் என்று மீண்டும் மீண்டும் பொதுப்புத்தியில் மட்டுமல்ல, குழந்தைப் பருவத்திலிருந்தே சிறார் மனதில் ஆழப் பதிய வைக்கிறார்கள்.

வீடு, தெரு, பள்ளி, கல்லூரி, அலுவலகம் என அனைத்து வெளிகளிலும் அறிவிலும் வலுவிலும் ஆணே உயர்ந்தவன் என்ற மதிப்பீடுகளில்தான் நமது சமுதாயத்தில் ஆண் – பெண் ஆளுமையுள்ளங்கள் வளர்கின்றன. ஆண் ஓங்கிப் பேசுவான். பெண் அடங்கிப் போவாள். ஆண் முடிவெடுப்பவன்; பெண் அதை ஏற்று அடங்கிப் போகிறவள் என்பதையே சமூகமும் கல்வியும் உள்ளேயும் வெளியேயும் போதிக்கிறது.

இது நம்மை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது? ஒரு பெண்ணிடம் ஒருவன் விரும்புகிறேன் என்று சொன்னால் அவள் அதை மறுப்பின்றி வெறுப்பின்றி உடனே ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் அப் பெண் மீது ஆசிட்  ஊற்றுவான், பெட்ரோல் ஊற்றிக் கொளுத்துவான், அவள் புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து இணையத்தில் உலவ விடுவான். அல்லது பாலியல் வல்லுறவோ கொலையோ செய்வான்.

இதோடு ஆணாதிக்கத்தின் விளைபொருளான சாதிய வருணப் பாகுபாடுகள் இதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்துகின்றன.

நமது அரசமைப்புச்சட்டம் இனம், நிறம், மொழி, மதம், சாதி, பால் என எந்தவிதமான பாகுபாடும் காட்டுவதைத் தடுக்கிறது. வளர்ச்சி மேம்பாட்டுக்கான வழிகளில் சம வாய்ப்புகள் நிலவுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது.

ஆனால் பார்க்கும் இடமெல்லாம் நீ ஆண், நீ பெண் என்ற பாகுபாடுகள். பெண் தனியாகச் செல்லும்போது வல்லுறவுக்கு ஆளானால் நீ ஏன் துணையில்லாமல் சென்றாய் என்கிறார்கள். பணி செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால் பெண் ஏன் வேலைக்குச் செல்ல வேண்டும், பெண் ஆபாசமாக உடை உடுத்துவதால்தான் ஆண் வல்லுறவு செய்கிறான் என்கிறார்கள். அவன் ஏன் தனியே செல்கிறாள், அவள் ஏன் சிரிக்கிறாள், அவள் ஏன் ஆணுக்குச் சமமாகப் போட்டி போடுகிறாள், அவள் ஏன் படிக்க வேண்டும், அவள் ஏன் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று எதிர்க்கேள்விகள்தான் கேட்கிறோம்.

c

ஆனால் நான்கு வயது சிறுமியும் மூதாட்டியும் வல்லுறவுக்கு ஆளாவது எதனால்? அடிப்படையிலேயே கோளாறு இருக்கிறது. அது ஆண், பெண் குறித்த பார்வையில் இருக்கிறது. மனித மூளை ஆணுக்குத் தனியாகவும் பெண்ணுக்குத் தனியாகவும் அமையவில்லை. உடல் அங்கங்களின் திறன்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பாலியல் சார்ந்த வேறுபாடுகள் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஒன்றுதான். ஆனால் இந்த இயற்கையையே தனது விருப்பத்திற்கேற்ப தகவமைத்தவன் மனிதன்.

மனிதகுல வரலாறு சில லட்சம் ஆண்டுகள் என்றால் அவற்றில் இரண்டாயிரம் ஆண்டுகள்தான் ஆண் மைய சிந்தனையை முன் நிறுத்தும் தந்தை வழிச் சமுதாயம் உள்ளது. அதற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகள் தாய் வழிச் சமுதாயம்தான் இருந்துள்ளது. மனித சமூக உருவாக்கத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம பங்கு உண்டு.

இதை எப்போது உணரப் போகிறோம்? பின் உணர்த்தப் போகிறோம்.

கட்டுரையாளர்:  jeon08@gmail.com  https://www.facebook.com/appsmoo

1 thought on “பாலினப் பாகுபாடுகள் அற்றுப் போவது எப்போது?: அப்பணசாமி

  1. அடிப்படையிலேயேக் கோளாறு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.