மோடி அமைச்சரவையில் இடம் பெற உள்ள கே வி காமத், ஸ்வபன் தாஸ்குப்தா

--

டில்லி

த்திய அமைச்சரவையில் விரைவில் விரிவாக்கம் நடைபெற்று இரு புதிய அமைச்சர்கள் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.

கடந்த 2014 ஆம் வருடம் மோடி முதல் முறையாகப் பதவி ஏற்ற போது அமைச்சரவையில் சில துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.  அப்போது ஐநா பாதுகாப்புச் சபை முன்னாள் தலைவர் ஹர்தீப்சிங் பூரி. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அல்போன்ஸ், மூத்த பத்திரிகையாளர் அக்பர் உள்ளிட்டோர் அமைச்சர்கள் ஆனார்கள்.

தற்போது நாட்டில் கடும் பொருளாதார மந்த நிலை உள்ளது.  இதை சமாளிக்கக் கூடிய நிபுணர்களுக்கு பாஜக அரசு அமைச்சர் பதவிகள் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.   இரண்டாம் முறையாக மோடி பிரதமரான போது பாஜகவை சேர்ந்த 72 பேருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.  ஆயினும் கூட்டணி கடையை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் பதவி அளிக்கப்படவில்லை.

கடந்த 3 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.  இதில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  நாடெங்கும் பொருளாதார மந்த நிலை மட்டுமின்றி குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து கடும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  எனவே அதையும் சமாளிக்க வேண்டிய நிலையில் மத்திய அரசு உள்ளதால் அது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

எனவே அமைச்சரவை விரிவாக்கத்தின் போது இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கிகளின் முன்னாள் தலைவரும் தற்போதைய பிரிக்ஸ் வங்கி தலைவருமான கே வி காமத் நிதித் துறையில் மத்திய இணை அமைச்சராகப் பதவி அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  அத்துடன் குடியுரிமை சட்ட விவகாரங்களைச் சரிவரக் கையாள மூத்த பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ்குப்தாவுக்கும் இணை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

இதைத் தவிர முன்னாள் ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உள்ளிட்ட மேலும் மூவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   அமைச்சரவை விரிவாக்கத்தின் போது பிரதமர் மோடியின் விருப்பப்படி துறை சார்ந்த வல்லுநர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.