KXIP claim 14-run win over KKR; keep play-offs hope alive

 

ஐபிஎல் டி20 தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்று, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்தது. மொகாலி, பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசியது. பஞ்சாப் தொடக்க வீரர்களாக கப்தில், வோரா களமிறங்கினர். வோரா 25 ரன் (16 பந்து, 4 பவுண்டரி), கப்தில் 12 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஷான் மார்ஷ் 11 ரன் எடுத்து வோக்ஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். சாஹா – கேப்டன் மேக்ஸ்வெல் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்தது.

 

மேக்ஸ்வெல் 44 ரன் (25 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), aசாஹா 38 ரன் விளாசி குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். ஸ்வப்னில் 2 ரன்னில் வெளியேறினார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. அக்சர் 8 ரன், திவாஷியா 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் நரைன், லின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி 39 ரன் சேர்த்த நிலையில், நரைன் (18), மோகித் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக, கேப்டன் கம்பீர் (8), உத்தப்பா (0) இருவரையும் திவாதியா ஒரே ஓவரில் வெளியேற்ற, வெற்றி பஞ்சாப் பக்கம் திரும்பியது. லின் தனி ஆளாக போராடி அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். லின் 52 பந்தில் 84 ரன் எடுத்து துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆக, கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. கிராண்டோமி 11, வோக்ஸ் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மீதமுள்ள 2 லீக் போட்டியிலும் பஞ்சாப் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.