மொஹாலி:

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 12வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது, சிஎஸ்கே அணி கேப்டன் தோனி கடுமையாக விளையாடியும் 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது.

நேற்யை போட்டியின்போது,  டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இதனையடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் அதிரடியாக விளையாடத் தொடங்கினர்.  இதன் காரணமாக ரன்களும் மளமளவென ஏறத் தொடங்கின.

இதையடுத்து 8 வது ஓவரில் ஹர்பஜன் பந்து வீச்சில்  லோகேஷ் ராகுல் 37 ரன்கள் எடுத்த நிலையில்  பிராவோ விடம் கேட்ச ஆகி வெளியேறினார்.  அதையடுத்து,  அதிரடியாக விளையாடி வந்த கெயில் 33 பந்துகளில் 63 ரன்கள் (7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) எடுத்து வாட்சன் பந்தில் கேட்ச் ஆகி மைதானத்தை விட்டு வெளியேறினார். இதன் காரணமாக பஞ்சாப் அணியை ரன் எடுப்பதில் இருந்து கட்டுப்படுத்தி விட்டதாக நினைத்த சிஎஸ்கே,  தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்களும் அதிரடியாக ஆடத் தொடங்கியதால் பஞ்சாபி அணியின் ஸ்போர் விர்ரென உயர்ந்து வந்தது.

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை எடுத்தது.  சிஎஸ்கே வீரர்கள்  தாகூர், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் நின்று விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.  11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில்  2 வது ஓவரில் ஷேன் வாட்சன்  மோகித் சர்மா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து முரளி விஜயும் (12 ரன்கள்) வெளியேற  சென்னை அணியின் ஸ்கோர் 46 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளாக இருந்தது.

தொடர்ந்து பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் 6வது ஓவரை வீசத்தொடங்கினார். இதில் சிஎஸ்கே வீரர்  பில்லிங்ஸ் எல்பிடபுள்யூ ஆகி களத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இதைத்தொடர்ந்து கேப்டன் தோனி களமிறங்கினார். சிஎஸ்கேவை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் தோனி தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவருக்கு கைகொடுக்க வந்த வீரர்கள் தொடர்ந்து வெளியேறி சிஎஸ்கே அணி  மிகவும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.  அம்பதி ராயுடு 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 13 வது ஒவரின் 4 வது பந்தில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதன் காரணமாக  தனது அரை சதம் எடுத்திருக்க வேண்டிய முயற்சி தகர்க்கப்பட்டது.

பின்னர் தோனியுடன் ஜடேஜா இணைந்தார். ஜடேஜா பந்துகளை வீணாக்கிக்கொண்டிருந்தார்.  கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி வெற்றி பெற 76 ரன்கள் தேவைப்பட்டது. நிலைமை புரிந்துகொண்ட தோனி அதிரடியாக விளையாடத் தொடங்கினார். இதையடுத்து, 17 வது ஓவரின் 5 வது பந்தில் தோனி  50 ரன்கள் எடுத்து அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

18 வது ஓவரின் 2 வது பந்தில் ஜடேஜா, பந்தை  தூக்கி அடிக்க நினைத்து கேட்ச் ஆகி வெளியேறினார். தொடர்ந்து ஆடிய தோனி அதே ஓவரில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என விளாசினார். இதன் காரணமாக சிஎஸ்கே ரசிகர்கள் விசில் அடித்து தோனியை  மேலும் உற்சாகப்படுத்தினர். அரங்கமே போட்டியின் முடிவை விறுவிறுப்பாக எதிர்நோக்கிக் கொண்டிருந்தது.

தொலைக்காட்சிகளின்  வாயிலாக  விளையாட்டை  பார்ப்போரும்,  தோனி சிக்சர் அடிப்பாரா, சிஎஸ்கே மீண்டும் வெற்றிபெறுமா என எதிர்பார்ப்பில் பரபரப்புடன்  விளையாட்டை ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

கடைசி 6 பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா பந்து வீச வந்தார்.  இதன் காரணமாக ரசிகர்கள் சற்று பரபரப்பை அடைந்தனர். மோகித் சர்மா கடைசி ஓவரில் மிக அற்புதமாக பந்து வீசி தோனியை ரன் எடுக்கவிடாமல் தடுத்தார். இருந்தாலும் கடைசி பந்தில் தோனி சிக்ஸஅர அடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இருந்தாலும் பஞ்சாபை வீழ்த்தி முடியவில்லை.  சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கேப்டன் தோனி 44 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணியின் தரப்பில் ஆன்ட்ரூ டை 2 விக்கெட்டுகளையும், மோகித் சர்மா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றிருந்தனர்.

மும்பைக்கு எதிரான கடந்த போட்டியின்போது  சிறப்பாக ஆடி வெற்றிக்கு வித்திட்ட சாம் பில்லிங்ஸ் நேற்று சோபிக்க தவறினார். வெறும் 9 ரன்களில் பில்லிங்ஸ் வெளியேறினார். தோனியின் கடும் முயற்சி காரணமாகவே நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி இந்த அளவுக்கு ரன்களை எடுக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.