24 மணி நேரம்தான்! கர்நாடகாவில் மழை, கொட்டோ, கொட்டென்று கொட்ட போகிறது! வானிலை மையம் அலர்ட்

மும்பை:கியார் புயலால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் கர்நாடகாவில் மழை கொட்டோ, கொட்டு என்று கொட்ட போவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரபிக் கடலின் மத்திய கிழக்கு பகுதியில் கியார் என்ற புயல் மையம் கொண்டிருக்கிறது. தற்போது அந்த புயல் மேலும் வலுவடைந்து அதிதீவிர புயலாக உருமாறி இருக்கிறது.

அதிதீவிர புயலாக வலுவடைந்திருப்பதால், கர்நாடகாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு என்று அகில இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

 

வானிலை மைய அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: கிழக்கு, மத்திய அரபிக் கடலில் இருந்து 24 மணி நேரத்தில் புயல் கடுமையாக வலுப்பெறும். அதன் காரணமாக, வடக்கு கர்நாடகாவில் பலத்த மழை பெய்யும்.

கிழக்கு ரத்னகிரி பகுதியில் மணிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். மகாராஷ்டிராவின் மும்பை, கோவா ஆகிய பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறது.

புயல் எச்சரிக்கையால் முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருப்பதாக கடலோர பாதுகாப்பு படை அறிவித்திருக்கிறது. இது குறித்து அதிகாரிகள் கூறியிருப்பதாவது:

கியார் புயலையடுத்து, மேற்கு கடற்கரையோரம் பாதுகாப்பை அதிகரித்து இருக்கிறோம். டோர்னியர் விமானங்கள் மூலம் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளோம் என்று கூறினர்.