டில்லி

ல் அண்ட் டி நிறுவன தலைவருக்கு விடுமுறை ஊதியமாக ரூ.19.381 கோடி வழங்கப்பட உள்ளது.

உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான லார்சன் அண்ட் டியுப்ரோ நிறுவனம் சுருக்கமாக எல் அண்ட் டி என அழைக்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக அனில் மணிபாய் நாயக் பதவி வகித்து வந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் அவர் ஓய்வு பெற்றார். அதன் பிறகு அந்நிறுவனத்தின் தலைவராக பொறுப்பில் உள்ளார்.

கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக எல் அண்ட் டி நிறுவனத்தில் பணிபுரியும் நாயக் அந்நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு மிகவும் பாடு பட்டவர் ஆவார். அது மட்டுமின்றி ஒரு தலை சிறந்த பொருளாதார நிபுணரும் ஆவார். இவர் நான்கு முறை டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அதைத் தவிர அகமதாபாத் ஐஐஎம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் இவருக்கு ஏராளமான விருதுகளை அளித்துள்ளது.

இவர் அகமதாபாத் ஐஐஎம் நிறுவனத்தில் தலைவராகவும் பணி புரிந்துள்ளார். இவருடைய சேவையை பாராட்டி கடந்த 2009 ஆம் வருடம் மத்திய அரசு பத்ம பூஷன் விருதை அளித்தது. தற்போது இவருக்கு நிறுவனம் தரவேண்டிய சம்பளக் கணக்கு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இவர் எடுக்காத விடுமுறை தினங்களுக்கான ஊதியம் மட்டும் ரூ. 19.381 கோடி ஆகும். இதைத் தவிர அவர் கிராசுடியாக ரூ.55.038 கோடியும் ஓய்வுதியமாக ரூ. 1.5 கோடியும் பெற உள்ளார்.