சென்னை:

ரஜினிகாந்த் நடிக்கும் “காலா” படத்துக்கு செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி விபத்தில் பலியானார்.

ரஜினிகாந்த் தற்போது ‘காலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

(மும்பை படப்பிடிப்பில் ரஜினி – கோப்பு படம்)

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பை தாராவி பகுதியில் நடந்தது.  இதைத் தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

இதற்காக  சென்னை பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூரில் உள்ள பிலிம்சிட்டியில்  செட் போடப்பட்டு வருகிறது.

 

அங்கு ‘தாராவி’ போல பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் பல நாட்களாக நடந்து வருகிறது. நேற்று அரங்கம் அமைக்கும் பணியில் பூந்தமல்லி,  மேப்பூரைச் சேர்ந்த மைக்கேல் என்கிற ராஜேஷ் என்ற தொழிலாளியும் ஈடுபட்டிருந்தார்.

அப்போது ஒரு நாற்காலியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அரங்கத்துக்குள் மைக்கேல் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கீழே கிடந்த மின்சார வயரை கவனிக்காமல்  மிதித்து விட்டார். இதையடுத்து அவர்  தூக்கி வீசப்பட்டார்.

அவரை மற்ற தொழிலாளர்கள் மீட்டு பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை மைக்கேல் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பலியான மைக்கேலுக்கு சூர்யா என்ற மனைவியும், மைத்ரேயன் என்ற 1½ வயது மகனும் உள்ளனர். சூர்யா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.