தொழிலாளர்கள் உங்களின் பிணைக் கைதிகள் கிடையாது: உ.பி முதலைமைச்சருக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம்

லக்னோ: தொழிலாளர்கள் உங்களின் பிணைக் கைதிகள் கிடையாது என்று உ. பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த  3 வருடங்களுக்கு தொழிலாளர் சட்டம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் ஆதித்யநாத் தலைமையில் அம்மாநில அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்துள்ளது.

அதன் மூலம் மொத்தம் 38 தொழிலாளர் சட்டங்களுக்கு அங்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 4 சட்டங்கள் மட்டும் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தொழிலாளர் சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.

நீங்கள் தொழிலாளர்களுக்கு உதவத் தயாராக இல்லை. அவர்களது குடும்பங்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் கொடுக்கவில்லை. இப்போது அவர்களின் உரிமைகளை நசுக்க சட்டங்களை உருவாக்குகிறீர்கள். தொழிலாளர்கள் நாட்டை உருவாக்குபவர்கள், உங்கள் பிணைக் கைதிகள் அல்ல என்று கண்டித்துள்ளார்.