நாட்டில் வளர்ச்சி இல்லாததால் மோடி ‘கப் சிப்’ !! ராகுல்காந்தி தாக்கு

பதான்:

நாட்டில் வளர்ச்சி இல்லாததால் தேர்தல் பிரச்சாரங்களில் அது குறித்து பிரதமர் மோடி பேசவில்லை என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத் பதன் மாவட்டம் ஹரீஜ் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. இதில் ராகுல்காந்தி பேசுகையில், ‘‘ மோடி முதலில் நர்மதாவில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். ஆனால், நர்மதா தண்ணீர் கிராமங்களை சென்றடையாமல், டாடா நானோ தொழிற்சாலைக்கு சென்றதை அறிந்து அந்த முடிவை கைவிட்டார்.

குஜராத்தில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும். காங்கிரஸ் அரசு தொழிலதிபர்களுக்கான அரசாக இருக்காது. விவசாயிகள், ஏழை மக்கள், தொழிலாளர்களுக்கான அரசாக இருக்கும்.

மோடி தனது பேச்சில் நாட்டின் வளர்ச்சி பற்றி ஏன் குறிப்பிடுவதில்லை. அவர் பேசும்போதெல்லாம் வளர்ச்சி பற்றி குறிப்பிடுவார். ஆனால், நாட்டில் இது நடக்கவில்லை என்பதால், அது பற்றி தனது தேர்தல் பிரச்சாரங்களில் பேசுவதில்லை. மோடி ஊழல் பற்றி பேசமாட்டார்.

இதற்கு அமித்ஷா மகன் ரூ.50 ஆயிரத்தை ரூ.80 கோடியாக மாற்றியதே காரணம். மோடி தற்போது தன்னை பற்றியே பேசி வருகிறார். நேற்று நடந்த கூட்டத்தில் 60 சதவீதம் அவரை பற்றியே பேசினார். ஆனால், இந்த தேர்தல் மோடி பற்றியோ ராகுல் பற்றியோ இல்லை. குஜராத்தின் வளர்ச்சி பற்றியது’’ என்றார்.