மும்பை: ஜம்மு காஷ்மீரிலிருந்து லடாக் பிரிக்கப்பட்டுவிட்டாலும், லடாக் பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட்டில், குறிப்பிட்ட காலத்திற்கு ஜம்மு காஷ்மீர் வீரர்களாகவே கருதப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் கமிட்டி நிர்வாகிகளின் தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “பிசிசிஐ அமைப்பைப் பொறுத்தவரை, புதிதாக பிரிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்திற்கென்று, உடனடியாக தனி மாநில அணியை அமைக்க விரும்பவில்லை. சில காலத்திற்கு, லடாக் வீரர்கள் ஜம்மு-காஷ்மீர் அணியைச் சேர்ந்தவர்களாகவே கருதப்படுவர்.

லடாக் பகுதிக்கென்று தனி கிரிக்கெட் அமைப்பை உருவாக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. எனவே, தற்போதைய நிலையில் நடைபெறும் அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் லடாக் பகுதியைச் சேர்ந்த வீரர்கள், ஜம்மு காஷ்மீர் அணியினராகவே பங்குபெறுவார்கள்” என்றார்.

தற்போது யூனியன் பிரதேசமாக இருக்கும் புதுச்சேரியைப்போல், லடாக் பகுதியும் பிசிசிஐ அமைப்பின் வாக்குரிமைப் பெற்ற உறுப்பினராகுமா? என்று கேட்டதற்கு, அதுதொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனறு தெரிவித்தார்.

யூனியன் பிரதேசமாக இருக்கும் சண்டிகாரை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், பஞ்சாப் அணி சார்பாகவோ அல்லது ஹரியானா சார்பாகவோ உள்ளூர் போட்டிகளில் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.