டெல்லி:

போர்க்களத்தில் பெண்களையும் அனுமதிக்க இந்திய ராணுவம் தயாராகி வருவதாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நார்வே, ஸ்வீடன் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் மட்டுமே போர்க்களத்தில் பெண்கள் பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணையவுள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு இந்திய விமானப் படை யில் போர் விமானங்களில் பணியாற்ற அவானி சதுர்வேதி, பாவனா காந்த் மற்றும் மோகனா சிங் என்ற 3 பெண்கள் நியமிக்கப்பட்டனர். இதன்மூலம் விமானப்படையில் புதிய வரலாறு படைக்கப்பட்டது.

தரைப்படையை பொறுத்த வரை மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் மட்டுமே பெண்கள் பணியமர்த்தப்பட்டுள் ளனர். ஆண்களைப் போல அவர்கள் போர்க்களத்தில் சென்று பணியாற்ற அனுமதிக்கப்பட வில்லை. இந்நிலையில் இந்திய ராணுவத்திலும் போர்க்களத்துக்கு சென்று எதிரிகளுடன் நேருக்கு நேர் சண்டையிடும் பணியில் பெண்களையும் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராணுவ தளபதி பிபின் ராவத் கூறுகையில், ‘‘போர்களத்தில் பெண்களையும் அனுமதிக்கும் நடவடிக்கையை ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது. இதற்காக ஆரம்பத்தில் ராணுவ போலீஸில் பெண்கள் பணியமர்த் தப்படுவார்கள். அதன்பின் அவர்கள் வீராங்கனைகளாக போர்க் களத்தில் போரிட அனுப்பி வைக்கப்படுவார்கள்’’ என்றார்.

ராணுவ நிலைகள் மற்றும் கன்டோன்மென்ட்களை கண்காணிப்பது, வீரர்கள் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறாமல் தடுப்பது, தேவையான பகுதிகளில் வீரர்களின் எண்ணிக்கையை போதிய அளவுக்கு பராமரிப்பது, அமைதி மற்றும் போர்க்காலங்களில் தளவாடங்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்வது, போர் கைதிகளைக் கையாள்வது, மாநில போலீஸாருக்கு தேவையான உதவிகளை வழங்குவது ஆகியவை ராணுவ போலீஸின் பணிகளாகும்.
இதேபோல் போர்க் கப்பல்களில் பெண்களைப் பணியமர்த்துவது தொடர்பான கொள்கையை வகுக்கும் பணியில் இந்திய கடற்படையும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.