பெண் ஆடியோ விவகாரம்: அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க்ககோரி பெண் ஆர்ப்பாட்டம்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் கோரி, நர்மதா என்ற பெண் நூதன முறையில் போராட்டம் நடத்தியது சென்னை அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இளம்பெண் ஒருவரை அமைச்சர் ஜெயக்குமார் கர்ப்பமாக்கி குழந்தைக்கு தாயாக்கியதாக டி.டி.வி.தினகரன் தரப்பினரால் குற்றம்சாட்டப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண்ணின் தாயாருடன் ஜெயக்குமார் பேசியதாக ஒரு ஆடியோவும் வெளியானது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்தார்.

இதற்கிடையே மனித உரிமை ஆனையத்தில் ஜெயக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  நர்மதா என்ற பெண், கையில் தூண்டிலில் மீனை மாட்டி கொண்டு அம்பத்தூர் பேருந்து
நிலையம் அருகே சுமார் ஒரு மணி நேரம்  போராட்டம் நடத்தினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயக்குமார் மீது  சிந்து என்ற பெண்ணை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. ஆனால் ஜெயக்குமார்  மீது தமிழக முதல்வர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதை ஆளுநர்  கவனத்திற்குக்  நான் கெண்டு சென்றேன்.  ஆனால் அப்போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பாலியல் குற்றசாட்டுக்கு ஆளான  அமைச்சர் ஏன் இன்னும் தான் நிரபராதி என நிருபிக்க டி.என் ஏ சோதனைக்கு முன்வரவில்லை. குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், தன் மீது குற்றமில்லை என்று நிரூபிக்கும் வரையில் அவர் பதவியில் தொடரக்கூடாது” என்றார்.

இவரது போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த அம்பத்தூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
இவர் ஏற்கனவே ஜீன் 29ம் தேதி அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் தலையில் பச்சை தலைப்பாகையோடு கையில் நண்டுகளை வைத்து போராட்டம் நடத்தினார் என்பதும் அப்போதும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  .