திருச்சியில் நாளை லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் கருஞ்சட்டைப் பேரணி, மாநாடு!

மைப்புகளைக் கடந்து பெரியார் ஈ.வெ.ரா தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொள்ளும் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாடு நாளை (23.12.2018 – ஞாயிறு) திருச்சியில் நடைபெற இருக்கிறது.

பெரியார் உணர்வாளர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான பேரணியும் அதனை ஒட்டி மாலை தமிழின உரிமை மீட்பு மாநாடு நடத்துவது என பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி டிசம்பர் 23ம் தேதி  திருச்சியில் பேரணியும் மாநாடு நடத்துவதற்கு உடனடியாக காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில் பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறை, மாநாட்டிற்கு மட்டும் அனுமதி அளித்தது.

இதனையடுத்து பேரணிக்கு அனுமதி வேண்டி மதுரை உயர் நீதிமன்றக் கிளையை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு அணுகியது. இந்நிலையில் திடீரென்று 17/12/2018 அன்று மாநாட்டில்  கலந்துகொள்ள இருக்கும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி  மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பதால் மாநாட்டுக்கும் அனுமதி அளிக்க முடியாது என்று காவல்துறை தெரிவித்தது.

இதையடுத்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு, ஏற்கனவே பேரணிக்கு அனுமதி கேட்டு தொடுத்திருந்த வழக்குடன்  மாநாட்டிற்கு தடை நீக்க வேண்டும் என்றும் ஒரு புதிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அளித்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் பேரணி, மாநாட்டுக்கு காவல்துறை விதித்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து நாளை திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி  மற்றும் மாநாடு நடைபெற இருக்கிறது.

இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்ததாவது:

“பேரணி மற்றும் மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரணமி, திராவிடர் விடுதலைக் கழக தலவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை  தலைவர் சுப.வீரபாண்டியன், மே 17 இயக்க தலைவர் திருமுருகன்காந்தி, உள்ளிட்ட பல்வேறு திராவிட – பெரியாரிய இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

கட்சி மற்றும் அமைப்பு பேதமின்றி பெரியார் தொண்டர்கள்  லட்சக்கணக்கில் கூடும் மாநாடாக  இது இருக்கும்.

நாளை டிசம்பர் 23ம் தேதி  திருச்சியில் கோகினூர் (கே.டி) திரையரங்கு அருகில் பிற்பகல் 1 மணியளவில் பேரணி துவங்கி

தென்னூர் உழவர் சந்தை மாநாட்டுத் திடலில்  நிறைவடையும். அங்கு தமிழின உரிமை மீட்பு மாநாடு நடைபெறும்” என்று  தெரிவித்தனர்.