ஐதராபாத்: சமீபத்தில் வெளியிடப்பட்ட விஸ்டன் விருதுபெறுவோர் பட்டியலில், இந்திய அதிரடி மன்னன் ரோகித் ஷர்மாவின் பெயர் இடம்பெறாதது குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய முன்னாள் வீரர் லட்சுமண்.

இங்கிலாந்தில் வெளியிடப்படும் ‘விஸ்டன்’ இதழ், கிரிக்கெட்டின் பைபிள் என்று வர்ணிக்கப்படுவது வழக்கம். அந்த இதழ் சார்பாக, ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கப்படுகிறது.

இது ஒரு கவுரவம் வாய்ந்த விருதாகும். இந்த 2020ம் ஆண்டுக்கான விருதுக்கு இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சிறந்த முன்னணி வீரருக்கான விருது வழங்கப்பட்டது.

“கடந்த 2019 உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு 5 சதங்களை அடித்த ரோகித் ஷர்மாவுக்கு இந்த விருது வழங்கப்படாதது தனக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் அதிர்ச்சியான விஷயம்தான்” என்று தனது அதிர்ச்சியையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார் லட்சுமண்.