பெண்களுக்கு, திருமணத்திற்கு பின்னரும், குழந்தை பெற்ற பின்னரும், ஏன் ஓய்வுக்குப் பின்னரும்கூட, அவர்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது என்று நிரூபித்துள்ளார் முன்னாள் மகளிர் கிரிக்கெட் அணி வீரரும், இந்நாள் கிரிக்கெட் நடுவருமான ஜி.எஸ்.லட்சுமி.

ஆந்திராவின் ராஜமுந்திரியில் பிறந்து, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் வளர்ந்த லட்சுமி, படிப்பில் மோசமான மதிப்பெண் பெற்றதால், தனக்குப் பிடித்தமான கிரிக்கெட்டில் நுழைந்தார்.

கடந்த 1991ம் ஆண்டு தனது திருமணத்திற்கு பின்னரும், ரயில்வே கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்ததால், கடும் போராட்டத்திற்கு பின்னர் அதில் இடம்பெற்று சாதித்தார்.

கடந்த 2004ம் ஆண்டு விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றார். 2008ம் ஆண்டில் பெண் நடுவர்களை அறிமுகம் செய்தது இந்திய கிரிக்கெட் வாரியம். முதன்முதலாக தேர்வு செய்யப்பட்ட 5 பெண் நடுவர்களில் லட்சுமியும் ஒருவர்.

இவர், பெண்கள் போட்டிகளில் மட்டுமல்ல, ஆண்களுக்கான போட்டிகளிலும் நடுவராக பணியாற்றி வருகிறார். ஆனால், தனது பெரிய ஆசையாக இவர் கூறுவது, மகளிர் உலகக் கோப்பை போட்டிகளில், தான் நடுவராக பணியாற்ற வேண்டும் என்பதைத்தான்.

உலகக் கோப்பையில், 50 ஓவர்கள் மற்றும் 20 ஓவர்கள் ஆகிய இரண்டு விதமான போட்டிகளிலும் நடுவராக பணியாற்றுவதோடு, முக்கியமாக இறுதிப் போட்டியில் பங்கேற்க வேண்டுமென தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

பெண்களுக்கு எந்த நிலையிலும் வாழ்க்கை இருக்கிறது. எனவே, தளராமல் போராட வேண்டுமென இவர் வலியுறுத்த விரும்புகிறார்.