பீகார் : மாணவர் தலைவரை ஒருங்கிணைந்த வேட்பாளராக்க லாலு ஒப்புதல்

பாட்னா

ம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் தலைவர் கன்னையா குமாரை ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி வேட்பாளராக்க லாலு பிரசாத் யாதவ் ஒப்புதல் அளித்துள்ளார்.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவராக இருந்தவர் கன்னையா குமார்.   இவர் பீகார் மாநிலத்தில் உள்ள பகுசராய் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.   சுமார் 31 வயதாகும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான கன்னையா குமார் கடந்த 2016 ஆம் வருடம் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு போராட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அதன் பிறகு மாணவர்கள் நடத்திய  போராட்டத்துக்குப் பின் அவர் காவல்துறையினரால் விடுவிக்கபட்டார்.  அத்துடன் அவருக்கு பல்கலைக்கழகம் ரூ.10000 அபராதம் விதித்தது.   அந்த நடவடிக்கையை டில்லி உயர்நீதிமன்றம் பிறகு ரத்து செய்தது.   அன்று முதல் இவரை டில்லி காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

கன்னையா குமாரின் சொந்த ஊரான பகுசராய் தொகுதியில் தற்போது தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது.   இந்த தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் ஆதரவு உள்ளதால் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாணவர் தலைவர் கன்னையா குமாரை நிறுத்த அந்தக் கட்சி முடிவு செய்தது.

கன்னையா குமாரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஒப்புதல் அளித்துள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.    அத்துடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் பல எதிர்க்கட்சிகளும் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாக பீகார் மாநில கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.